உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

சபையின் தொடர்பு உடையவர். ஆசிரியர் மறைமலையடிகள் மாட்டுப் பேரன்பு கனிந்த பெருந்திருவாளர். அவர்தம் உறவும் உழுவலன்பும் இளைய அரங்கர்க்கு வாய்த்தது, வான்பார் பயிர்க்கு வளமழை பொழிந்தது போலாயிற்று! திக்குத் தெரியாத காட்டில் தெருமந்து அலமருவார்க்குத் திசை தெரிந்து வழிகாட்டும் திறலாளி உறவு வாய்த்தமை போல் ஆயிற்று! அம்மட்டோ, வாழத் துடிக்கும் வழிதேடுவார்க்கு வழிகூட்டும் வள்ளன்மையும் வாய்ப்பதுபோல் ஆயிற்று! தூத்துக்குடியில் நேர்ந்த திருப்பமே அரங்கனாரைத் தமிழ் அரங்கராய்ச் செய்தது என்பது வெளிப்படை.

தூத்துக்குடி வணிக நிலையமொன்றில் பணி செய்தார் திருவரங்கர். வணிகப் பயிற்சி பெறுதற்கு வாய்ப்பும், வருங்கால வாழ்வுக்கு அடித்தளமுமாகத் தூத்துக்குடி வாழ்வு அமைந்ததே அன்றி, மனநிறைவான பணியாகவோ, தம் குடும்பத்தின் முட்டறுக்க உதவும் வருவாயான பணியாகவோ வணிக நிலையப் பணி அமையவில்லை. இந் நிலையில் ஆங்கிருத்தல் ‘குடி செய்வல் என்னும் ஒருவற்கு' ஆகாமையை உணர்ந்தார் அரங்கர். வீட்டார் இசைவு கேட்டுச் செல்வதும் இயலாது என உணர்ந்தார். அதனால் வழுதூர் அழகிய சுந்தரனார் வழிகாட்டலின்படி, தூத்துக்குடியில் இருந்து கப்பல் ஏறிக் கொழும்புக்குச் சென்றார்.

கொழும்பு சேர்ந்த பின்னரே தம் அருமை அன்னையார்க்கும், உடன்பிறந்தார்க்கும் செய்தி விடுத்தார். அரங்கரின் பிரிவு குடும்பத்தை அலைத்தது. எனினும் அவர்தம் ஆர்வ முயற்சிப் பெருக்கும் உருக்கியது! குடும்பப் பொறையும், அதன் நலமும் கருதி இருபாலும் நிறைவு கொள்ளும் நிலைமை உருவாகியது. இது நிகழ்ந்தது 1907ஆம் ஆண்டிலாகும். அப்பொழுது அரங்கனார் அகவை 17.

கொழும்பு மாநகர் சேர்ந்த அரங்கர், திருநெல்வேலியைச் சார்ந்த * 'சிசுவ.' என்னும் வணிக நிறுவனத்தில் பணி ஏற்றார். பணி என்றால் எப்படி? கடைக்கணக்கு எழுதும் எழுத்தர் பணி! எழுத்தாளர் எழுத்துகளை எல்லாம் முத்திரையிடப் பிறந்த பெருமகனார், கடைக்கணக்கு எழுதும் பணியில் ஈடுபட்டார்.

  • சிசுவ. என்பது சாத்தான் குளம் சிவகாமிநாதபிள்ளை, அம்மன்புரம் சுப்பராய பிள்ளை, குலசேகர பட்டினம் வயிரவநாதபிள்ளை என்னும் மூவரும் நடாத்திய கூட்டு நிறுவனச் சுருக்கப் பெயராகும்.