உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஈழத்தில் தமிழ்மலை

அடிகள் வந்துசேரும் கப்பலை அறிந்து கொண்டிருந்த அரங்கர், தம் அன்பர்களும் அணுக்கர்களும் நகரப்பெரு மக்களும் திரண்டிருக்க வரவேற்று மகிழ்ந்தார். அதற்கு முன்னர் அன்புக் கடிதங்கள் வாயிலாக மட்டும் அறிந்திருந்த அரங்கரின் இளமைப் பொலிவையும், வளமையுளத்தையும் நயத்தகு பண்பு நலங்களையும் நேரில் கண்டறிந்த அடிகளார் மட்டற்ற மகிழ்வு கொண்டார். தம்மை ஈழத்திற்கு இவ் விளைஞர்தாமோ அழைத்தார்? இவர்தம் ஆர்வமும் ஆற்றலும்தாம் என்னே! என்னே! விளைஞர்பால் இங்குறையும் பொருட் செல்வர்களும் அருட் செல்வர்களும் கொண்டுள்ள ஈடுபாடு தாம் என்னே! என்னே! எமக்குத் தொண்டு செய்ய வென்றே இறைவன் இவ் வரங்க வள்ளலை விடுத்தருளினான் கொல்லோ! என்று பலவாக எண்ணி உளந்ததும்பினார்; உவகை கூர்ந்தார்!

இவ்

தவத்திரு அடிகளார் சமயப் புலமையையும் தமிழ் வீறுகோளையும் நூல்கள் வழியாகவும், அவர்தம் பொழிவுகளைக் கேட்டுச் சுவைத்த ஆர்வலர் வழியாகவுமே அறிந்திருந்த அரங்கர், அடிகளாரின் தோற்றப் பொலிவிலும் தம்மை மறந்து மயங்கி ஒன்றினார்! சிவக்கோலம் என்பதும் என்பதும் இதுதானா! செந்தண்மையும் அந்தண்மை என்பதும் இதுதானா! என்னை வழிவழியாக ஆட்கொண்டருள வேண்டுமென்ற பேருள்ளப் பெருக்காகிய திருவருட் கோலம் என்பதும் இதுதானோ! வணங்கி வழிபடத்தக்க இறை மூர்த்தம் எளியேன் பொருட்டாக ஒருவடிவு கொண்டு எழுந்தருளியிருக்கும் பேறே பேறு! என்று தீராக் காதலராய் உள்ளம் அள்ளூறி ஊற்றெடுக்க நின்றார்.

வரவேற்பு அறிமுகம் என்பன வெல்லாம் முறையே நிகழ்ந்தன. அடிகளார்க்கு வளமெலாம் ஒருங்கு அமைந்த வளமனை ஒன்றில் தங்கும் வாய்ப்புச் செய்யப் பெற்றிருந்தது. முதற் கூட்டம் 10-1-14ஆம் நாள் மாலையில் கொழும்பு தம்பையா சத்திரத்தில் நிகழ்ந்தது. தொடக்க நிகழ்ச்சி எவ்வாறு அமைந்தது?