உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

7-1-1914இல் கொழும்புக்கு வந்து சேர்ந்து அடிகள் 24-3-1914 வரை ஆங்கிருந்தார். இவ் விரண்டரைத் திங்கள் காலமும் திருவரங்கர் அடிகளுக்கு அன்பராய், அணுக்கராய், அறிவறிந்த ஆர்வலராய், இவ் வெல்லாவற்றையும் கடந்த தொண்டராய்த் திகழ்ந்தார். எத்தனை இடங்களில் கூட்டம்; எத்தனை பெருமக்கள் தொடர்பு; எவ்வளவு பொருள் தண்டல்; எல்லாவற்றிலும் திருவரங்கர் தூய உள்ளம் படிந்து படிந்து தொண்டாற்றியது.

ஈழத்திற்கு சென்ற அடிகள் பன்னிரு கூட்டங்களில் பொழிவு செய்தார்; திருவருட் செல்வத்தையும், செந்தமிழ்ச் செல்வத்தையும் வாரி வாரி வழங்கினார்! வழங்கிய அடிகளுக்குப் பொருட் செல்வம் வாரி வழங்கும் கடப்பாட்டில் முனைந்து நின்றார் திருவரங்கர். அடிகள் பல்லாவரத்தில் திருமாளிகை ஒன்று எழுப்புதலில் ஊன்றியிருந்தார். அதற்கு வேண்டும் பொருட்குறையால் இடருற்றிருந்தார். அக் குறையைத் தீர்க்கத்தக்க வகையில் அடிகளார்க்கு அரங்கர் பொருளீட்டி உதவினார். அடிகளாரின் முதற் சுற்றுலாவிலேயே ரூ. 1888 கிடைக்க வகை செய்தார் திருவரங்கர். அம்மட்டோ, அடிகளாரின் அறிவாக்கப் பணிகளுக்கு உதவும் வகையில் திங்கள் தோறும் கொழும்புச் செல்வர்கள் வழியாகத் தொகை கிடைக்கவும் வகை செய்தார். அடிகளார் நூல்களைத் தருவித்து விற்றுத் தந்தும் உதவினார். பின்னே, அடிகளார் அச்சகம் ஒன்று நிறுவுதற்கு முனைந்தார். அதற்கும் அரங்கர் பெரும்பொருள் திரட்டித் தந்தார். அடிகளார் தம் அறிவுக் கடல் (ஞானசாகரம்) இதழில் திருவரங்கர் தொண்டினை எழுதிப் பாராட்டினார் :

“நமது அச்சுக் கூடத்திற்காக அன்பர்களிடம் பொருள் திரட்டித் தர முன்வந்து நின்று, சென்ற ஒன்றரையாண்டுகளாக இடையறாது உழைத்து உதவி செய்துவரும் நம் அன்புருவான ஸ்ரீமான் வ. திருவரங்கம் பிள்ளையர்களின் பேருபகாரச் செய்கைக்குத் திருவள்ளுவ நாயனார்,

‘செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும், வானகமும் ஆற்றல் அரிது'

என்றருளிச் செய்தவண்ணம் எவ்வகையான கைம்மாறுதான் செய்யக் கூடும்? நம்மருமைச் செந்தமிழ் மொழியும் சைவ சிந்தாந்த ஞானமும் பரவும்பொருட்டு நாமெடுத்துவரும் நன்முயற்சிகள் தளராமல் நடைபெற வேண்டுமென்று எண்ணிய அவர்களின் புண்ணிய நினைவும், அந் நினைவை நிலைபெறச் செய்த அவர்களின் அரிய பெரிய முயற்சியும் எல்லாம் வல்ல