உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

இசைவரோ? ஆழ்ந்து கற்று அரும்பெரு நூல்களின் மேற் கோள்கள் இலங்க வரைதற்கு எத்துணை நூல்களை ஒப்பிட்டு ஓதவேண்டும்? எத்துணைக் காலம் ஆகும்? நாளிதழ்ச் செய்தி போல்வதன்றே அடிகளார் எழுத எடுத்துக்கொண்ட பணி?

அடிகளார் நிலைமை ஈதாக அரங்கனார் நிலையையும் எண்ண வேண்டுமே! அவரல்லரோ ஆயிரம்பேரிடம் கையொப்பம் வாங்கிக் காலத்தால் இதழை வெளிப்படுத்த ஒப்புக்கொண்ட பொறுப்பாளர்! இதழ் சோர்ந்துபடின், இருதிங்கள் முத்திங்களுக்கு ஒன்றாக வெளிப்படின், பணத்தைத் தண்ட இயலுமோ? பணம் தந்தவரும் கண்டனம் எழுப்பாது இருப்பரோ? இந் நிலையால் அடிகளார்க்கும் - அரங்கர்க்கும் கருத்து வேறுபாடு எழுந்தது! வளர்ந்தது! கண்டு கலந்துரை யாடலும், கடிதம் வரைதலும் ஆகியவும் தடையுற்றுப் போயின. அரங்கனார் அடிகளார் தொடர்பு வணிக அளவிலோ, இதழ் நடாத்துதல் அளவிலோ, பொருள் அளவிலோ நிற்கும் தொடர்பாக அமைந்து விடவில்லையே! மாமன், மருகன் தொடர்பாக வன்றோ மலர்ந்தது! இரு வீட்டார் நிலையும் சொல்லொணாத் துயருக்கு உரியதாயிற்று. திருவாசக விரிவுரை அமைந்தது! செந்தமிழ்க் களஞ்சியம் நின்றது! அரங்கர் உள்ளம் நைந்து போனார்! அடிகளாரும் தீயூழை எண்ணித் தெருமந்தார்! அரங்கரும் கழகக் கால்கோளுக்குப் பின்னர்ச் சென்னையை விடுத்துப் பாளையங்கோட்டைக்குச் சென்று தங்க நேர்ந்து விட்டது. அதனால் திருநெல்வேலித் தலைமைக் கழகப்

பணிகளிலே அரங்கர் ஆழ்ந்தார்.

6