உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

பெருந்தக்க உள்ளம் ஓய்ந்து கிடக்குமோ? அங்கும் இங்கும் பார்த்தது! ஆய்ந்தும் அறிந்தும் முயன்றது! இயலும் செயலும் வினவியது! பார்த்தும் என்? முயன்றும் என்? வினவியும் என்? அரங்கர் தலையசைக்க வேண்டுமே! அம்பிகையாரை அன்றி அயலார் ஒருவருக்குத் தம் வாழ்வில் இடமில்லை! அதனைக் கடந்து எம்முயற்சி செய்தாலும் அதற்காகத் தம்மேல் வருந்திப் பயனில்லை! 'தாய் சொல் கேளாத தடிமகன்' என்னும் சிறுமையைத் தமக்குத் தந்து தாமும் தம் பெருமையைக் குறைத்துக் கொள்ளாமையே தகவாகும் என்பதை நயத்தக உரைத்து அன்னையார் எண்ணத்தைந் தகைந்தார்! 'இறைவன் விட்ட வழி!' என்ற அமைதியில் நின்றார் அன்னையார்! இந்நிலையிலே தான் செந்திலாறுமுகனார் தம் இனிய துணைவி யாரொடும் பாளைக்கு வந்தார்.

ஆறுமுகனார் அரங்கரைக் கண்டு அளவளாவினார். அவர்தம் தீராக் காதலைத் திட்டமாக அறிந்து மகிழ்ந்தார். அம்பிகையார் உறுதிபாட்டையும் தம் துணைவியார் வழியே தரிந்ததையும் உரைத்தார். உள்ளார உள்ளார அரங்கர் அரங்கர் உணர்ந்த செய்திதானே அது! எனினும், ஒற்றறிந்து உண்மையன்பர் அதனை உறுதிப்படுத்தி உரைக்கும்போது அதன் பெருமை ஒன்றுக்குப் பத்தாக உயர்தல் ஒருதலையன்றோ! ஆகலின் இறையருளை வாழ்த்தி ‘என்றேனும் தம் திருமணம் நடந்தேறுதல் உறுதி; காலம் வரும்வரை காத்திருப்போம்' என்று அமைதி கொண்டார். இருபக்கமும் இணையாய் அமைந்த இனிய மெய்க்காதல் ஈடேறவேண்டும் என்று வாழ்த்திச் சென்றார் ஆறுமுகனார். வழக்கம்போல் பணியில் ஒன்றினார் அரங்கர்.

அரங்கர் பணிகளில் பொழுதைச் செலவிட்டுத் தம்மை வாட்டும் காதலைக் காத்துக் கொண்டார் என்றால், வீட்டுள் அடைந்து கிடக்கும் அம்பிகையார்க்குக் காதல் வேக்காட்டைத் தீர்க்கும் வாயிலொன்று உண்டோ? அம்மையார் அவ் வாயிலைத் தேர்ந்து கொண்டார். அஃது அவர் பேரார்வம் காட்டிவந்த கல்வி பயிற்சியே!

1920இல் சென்னை வில்லிங்கன் பெருமாட்டி ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் முதற்படிவத்தில் சேர்ந்தார் அம்பிகையார். அதினொடு சார்ந்த விடுதியிலேயே உறையுள் கொண்டார். ஈராண்டுகள் ஆங்குப் பயின்றார். பின்னர் இவர் நான்காம் படிவம் பயிலும்போது இளைப்பு இருமல் பெரிதும் வாட்டிற்று!