உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

63

அம்பிகையை வாட்டிய இருமல், அடிகள் முதலாகக் குடும்பத்தினர் அனைவரின் உள்ளத்தையும் வாட்டிற்று. சின்னாள் விடுப்பும், பன்னாள் விடுப்பும் ஆகிப் படிப்பை முற்றாக விடுக்கவும் இருமல் வாட்டியது! ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் எல்லாம் செய்தாயின. உடல் நோய்த் தீர்வு, உள்ள நோய் தீராமல் தீராது போலும்! பள்ளிப் படிப்பை விடுத்த அம்பிகையார் வீட்டிலே யிருந்தே ஓதினார். வாய்த்த போதுகளில் தந்தையாரிடமும் பாடங்கேட்டுப் பயின்றார்.

இந் நிலையில் பல்லாவரத்தில் ‘வித்யோதயா' என்னும் ஆங்கிலக் கல்லூரி ஒன்று தொடங்கியது. அதன் தமிழாசிரியர் வேலை அம்பிகையாரைத் தேடிவந்தது. அம்பிகையார் தம் பத்தொன்பதாம் அகவையில் அப் பணி மேற்கொண்டார். ஈராண்டுகளுக்குப் பின் அக் கல்லூரி சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பகுதிக்கு மாறிற்று. ஆங்கும் அம்பிகையார் பணி மேற்கொண்டார். முன்னே ஓரளவு தணித்திருந்த இருமல் பெருகியது; வேலையைத் தகைந்தது; பணி விடுத்து வீட்டில் அமைந்தார் அம்பிகையார். காலம் உருண்டது!

1924இல் சென்னை இராயபுரத்தில் உள்ள நார்த்விக் மகளிர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழாசிரியப் பணியை மீண்டும் ஏற்றார். ஆங்கு நான்காண்டு பணி செய்தார். ஆசிரியப் பணி ஏற்ற காலந்தொட்டே தக்க அவைகளில் பொழிவாற்றும்

ப்பாடு மேற்கொண்டார். பொழிவுக்கும் பயிற்றுதற்கும் முறையாக ஆய்வு மேற்கொண்டார். அவ்வாய்வு அவரை அழியா மொழிச் செல்வியராய் ஆக்கி வைத்தது. அக் காலத்து அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி நுணுக்கங்கள் பின்னே தனித்தமிழச் சலவங்களாக வெளிப்பட்டு அடிகளார் வழிமரபைச் சிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கதாம்.

அம்பிகையின் உள்ளம் அறியாதார் என்ன செய்திருப்பர்? அடிகளாரிடமும் அன்னையார் சவுந்தரவல்லியினிடமும் பெண் பேசவும் வந்தனர். பெருந்தொகை தந்து மணங்கொள்ளவும் செல்வச் செருக்கினர் முனைந்தனர். புலமைநலங் காட்டிப் பாருந்தும் மணம் பெறவும் முயன்றாரும் சிலர். ஆனால் மகள் வாழ்வுக்காகத் தம்மையே நொந்து கிடக்கும் அடிகளார் சைவரோ? செவி செவி கொடுத்தும் கேட்பரோ? கேட்பின் நீலாம்பிகையார் நிலை யாதாகும்?