உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

உருக்கத்தின் வழி வருவதேயன்றிக் கண்மூடித் தனத்தின் வழியாக வருவதென்று என்பதை வெளியாக்கி, மகளிர் இனத்தின் மணிவிளக்காய் விளங்கியவர் நீலாம்பிகையார்! அவர்தம் சமயச் சால்பும் சீர்திருத்தமும் என்ன செய்தன? நம்பா (நாத்திக) மதத் தலைவராய் விளங்கிய ஈ.வே. இராமசாமியாரின் மன்பதைத் தொண்டில் மனங்கொண்டு அவர்தம் சீர்திருத்தத்தில் தழுவுவன தழுவிக்கொண்டார். பெண்ணுரிமைக்கும், குல ஒருமைக்கும், விழிப்புறுத்தும் தொண்டுக்கும் மகிழ்ந்து, அவரைச் சென்னையில் நிகழ்ந்த மகளிர் மாநாட்டுக்கு அழைத்து அம் மாநாட்டிலே இராமசாமியார் தொண்டு நலங்களை எடுத்துரைத்துச், "செயற்கரிய செய்வார் பெரியர் என்னும் செந்நாப்போதார் செம்மொழிக்கோர் எடுத்துக்காட்டாய் இலங்கும் இவரை இம் மகளிர் மாநாட்டின் சார்பில் ‘பெரியார்’ எனப் பட்டம் தந்து பாராட்டுகிறோம்” என்று கூறிப் புதுமைப் பெண்ணாக விளங்கியவர் நீலாம்பிகையார். அம்மாநாட்டுத் தலைமை ஏற்றிருந்த பெருமகனார் டாக்டர் தருமாம்பாள்! இப்படியெல்லாம் நாகையார்க்கும் திறம் எப்படி வந்தது? அடிகளார் அருமை மகளார் என்பது மட்டுமோ? அரங்கர் அன்பு மனைவியார் என்பது மட்டுமோ? ஆம்; இவற்றொடும், அவர்தம் உண்மையறிவும் கூடிச் சேர்ந்த சிறப்பே அம்பிகையார் திறத்திற்கு வாய்த்த வாய்ப்பாயிற்றாம். இத் தனிப் பெரும் வாய்ப்புகளின் பயன் என்ன? பிறந்த குடிக்கும் பெருமை; புகுந்த குடிக்கும் பெருமை; தம் தனிப் பிறவிக்கும் பெருமை; பெண்ணினத்திற்கும் பெருமை; பிறந்த நாட்டுக்கும் பேசும் மொழிக்கும் பிற பிறவற்றுக்கும் பெருமை! ‘தத்தம் கருமமே கட்டளைக் கல்’லாம் பெருமை!