உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

83

போலவே, “செய்தக்க செய்யாமையானும் கெடும்” என்னும் துணிவால் செயலில் இறங்கிவிட்டார். “கலைச் சொல்லாக்கம் சம்பந்தமாய் இயக்குநர்கள் இசைவு இன்றி இனி ஏதும் நான் அனுமதி தர முடியாது” என்று தடைவிதித்தார் திருவரங்கர். ஆனால் தளர்ந்தார் அல்லர்; தவிர்ந்தாரல்லர்; தொடர்ந்தார்! அரங்கரைப் பாராட்ட வேண்டும்! தம்பியர் திட்டத்தை வலக்காரமாய் நிறுத்திவிட முனைந்தார் அல்லர். சுட்டிக் காட்டிய அளவில் அமைந்துவிட்டமையால் வ. சு. வுக்கும் ‘பிற்பயக்கும் நற்பாலவை’களைத் தேர்ந்து செய்தற்கு வாய்த்தது.

வ.

சு.

இத்தகைய வேறுபாடுகளுக்கும் மூலம் இல்லாமல் இல்லை. கழகத்தைக் கட்டிக் காப்பதில் ஒருவருக்கு ஒருவர் இளைத்தவர் சளைத்தவர் அல்லர் இருவரும்! ஆனால், கழகத்தின் இரு கண்களாக விளங்கிய சமயப்பணி மொழிப்பணி என்பவற்றை இருவரும் மேற்கொண்ட அளவில் வேறுபாடு இருந்தது.

திருவரங்கர் பணியில் மொழிப் பணியினும் சமயப் பணியே தலைதூக்கி நின்றது. வ. சு. பணியில், சமயப் பணியினும் மாழிப் பணியே தலைதூக்கி நின்றது. இரண்டையும் பேணுதலில் கருத்துண்டாயினும் விஞ்சிய உணர்வுகளால் இடைவெளியுண்டாதலும் இயற்கைதானே! ஆனால், அவ் வியற்கை, உரிமை, உறவு, கடமை ஆயவற்றைக் குறுக்கிட்டுத் தடுத்துவிட வில்லை என்பதே இவ் விரட்டையர் வரலாறு உணர்த்தும் இனிய செய்தியாம்.