உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. செந்தமிழ்ப் பணியும்

சிவநெறித் தொண்டும்

மணங்கொண்ட மக்கள் 'தாமின்புற’ எத்தனை எத்தனை திட்டங்களைப் போடுவது உலகியல் நெறி! மண்ணிலே கால் வைத்துக்கொண்டே, விண்ணில் திகழும் நிலவைத் ‘தேனிலவு' ஆக்கக்கூடிய ஆர்வப் பெருங்குடையதாயிற்றே புதுமணவாளர் பூரிப்பு! எத்தனை எண்ண வுந்துதல்கள் எக்களித்து ஆர்க்கும் புதுமணக் காதலர்களுக்கு! அதுவும் காதல் தடையுற்று ஒன்பான் ஆண்டுகள் காதல் கடுந்தவம் புரிந்தவர்கள் நிலையைச் சொல்ல வேண்டுமா? ஒரு நாள் பிரிவும் தடையுமே ஓராண்டாய்க் கழியுமாம்! அப் பிரிவு பாம்பாய்த் தேளாய்த் தீண்டித் தீண்டிக் கடுப்பேற்றுமாம்! அத்தகைய பிரிவுக்கு ஆட்பட்டவர் கூடினால் அக் கூட்டத்தின் விளைவு என்னாகும்? அறிவறிந்த அரங்கர் அம்பிகை யுள்ளங்கள், கட்டற்ற காதல் வயப்பட்ட நிலையிலும் கட்டுற்றே நின்று கவின் செய்தன! மணங்கொண்ட நாள் தொட்டே ‘உலகின்புறு’ பணிகளில் அவர்கள் ஒன்றிவிட்டனர்!

கருத்தொருமித்த நண்பர்கள் பணியும் சிறக்கும்! ஆயின், கருத்தொருமித்த காதலர் பணி சிறக்கக் கேட்க வேண்டுமோ? அன்றியும், ஒருவரை ஒருவர் விஞ்சிய நல்லுணர்வும், செயல் திறமும், சிந்தனை வளமும் பெற்றவர்கள் கூடிய இல்வாழ்க்கையின் சார்பில் இயலும் அகக் கடமைகள் புறக் கடமைகள் எல்லாம் அறக் கடமைகளாய் அமையும் என்பதில் ஐயமும் உண்டோ? ஆகலின், இவ்வினிய

மக்கள் தொடர்பு அவர்தம் தனி வாழ்வுக்கும் மன்பதை வாழ்வுக்கும் பொதுநலம் பொலிவூட்டுவ தாய் அமைந்து சிறந்தது.

தனித்தமிழ் எழுச்சியைத் தந்தையாம் அடிகளாருக்கே எழுப்பிய இனிய இயல்பினர் நீலாம்பிகையார்! அவர்தம் எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள இனிய வாய்ப்புக் கையின் கண் கனியென வாய்த்தபோது நழுவ விடுவாரோ? வினையால் வினையாக்கிக் கொள்ளும் வித்தகர் அரங்கர்தம் வாழ்க்கைத்