24. விழவறா விழுப்புகழ்
(விழைவு - விருப்பு, விருப்பால் தோன்றி விருப்பால் வளர்ந்து விருப்பால் நிறைந்து விருப்பு உண்டாக்கிக் கொண்டே இருப்பது விழா! ஒரு விழாவின் பயன் - காலமும் பணமும் மக்கள் உழைப்பும் எடுத்துக் கொள்ளும் விழாவின் பயன் - யாதாக இருக்கவேண்டும்? அது, விழுப்பமாக இருக்க வேண்டும்! அவ் விழுப்ப விழாக்கள் நிறைவேறிய பின்னரும்நினைவகலா விழாக் களின் பெருக்கத்து எல்லையே ஓர் அமைப்பின் - நாட்டின் பெருக்கத்து எல்லை.)
மதுரைமாநகரை ‘விழாநகர்' என்பர். “விழவு நின்ற வியன் மறுகு" என மதுரைத் தெருக்களும், "விழவறா வியலாவணம்' என்று பூம்புகார்த் தெருக்களும் இலக்கியப்புகழ் பெறுகின்றன. அவ்வாறே கழகம் 'விழவறா விழுப்புகழ்' நிலையமாகத் திகழ்ந்து வருதல் கண்கூடு.
விழாக்கோடலின் நோக்கம் என்னை? விழாக்கோடலின் நோக்கம் பலவாகலாம். ஆனால், அனைத்து விழாக்களின் பொது அடிப்படையும், மக்களை ஒன்றுபடுத்துதலும் உவகை யூட்டுதலும், புதுத்தொடர்புகளைப் பெருக்கி உவகை வளர்த் தலுமாம். திரு.வ.சு. அவர்கள் கழகத்தை விழவறா விழுப்புகழ் நிலையமாக்கி வருகின்றனர். அவர்கள் எடுத்துள்ள விழாக்கள் பொழுதுபோக்கு, வேண்டாவெற்றொலி, அறிவுக்கு ஒவ்வாச் செலவு இன்னவை சிறிதும் தலைகாட்டாச் சிறப்புடை யனவாம். தமிழைப் பரப்ப, தமிழ் இனத்தை வளர்க்க, தமிழ்நாட்டை உலகிடை உயர்த்த எடுப்பனவே அவ் விழாக்கள்.
திரு. வ.சு.எடுத்துள் விழாக்களைப் புலவரைப் போற்றும் விழாக்கள், நூல் வெளியீட்டு விழாக்கள், மொழி வளர்ச்சி விழாக்கள், கழகச் சீர்த்தி விழாக்கள், சமயச் சால்பு விழாக்கள் என்னும் ஐங்கூறுகளுள் அடக்கலா. பிற பிற பெயர்களால் விழாக்கள் எடுக்கப் பெறினும் அவையும் இவற்றுள் அடங்கும்.