224
இளங்குமரனார் தமிழ்வளம் - 27
திரு. வ.சு அவர் சென்ற வானூர்தியிலேயே வந்த தென்னெற்றி விசுவநாதன் அவர்கள் செய்தியை அறிந்துகொண்டு தாமும் உதவுதற்கு முன்வந்தார். 'நடுவணரசு'ப் பணி அமர்த்தல் ஆணையகத்தில் அப்பொழுது உறுப்பினராக இருந்ததிரு. சிவசண்முகம் அவர்களும் துணைக்கு நின்றார். இந்நிலையில் திரு.கோபாலரெட்டி அவர்களைப் பேட்டி கண்டனர். அவர் வருவாய்த்துறைச் செயலர் திரு. குருவில்லா அவர்களைக் காணுமாறு பணித்தார். அவரைப் பார்த்த போது உரிய நடவடிக்கைகள் எடுத்துக்கொள்வதாக ஒப்புதல் தந்தார்.
1959 திசம்பரில் திரு. கோபாலரெட்டி சென்னைக்கு வந்தார். அவரிடம் மீண்டும் திரு.வ.சு. சென்று நினைவூட்டினார். அவர் சென்னை வருமானவரித் தலைமை ஆணையரிடம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டார். தக்க நடவடிக்கை எடுத்துக்கொண்ட அவர் மீண்டும் தில்லி வருவாய்த்துறைத் தலைமைச் செயலரைப் பார்த்து வரிவிலக்கு ஆணை பெற்றுக் கொள்ளுமாறு குறித்தார்.
மீண்டும் 1960 சனவரித் திங்களில் தில்லிக்குச் சென்று தலைமைச் செயலரைக் கண்டார். அவர், "நீங்கள் தமிழுக்கும், சமயத்துக்கும் உண்மையான தொண்டுபுரிந்துகொண்டு வருகின்ற படியால், தனித்த முறையில் உங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப் பெறுகின்றது. இவ்வாணை சிலநாள்களில் சென்னையிலுள்ள தலைமை வருமானவரி ஆணையர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப் பெறும்; இனிக் கவலை வேண்டா; மகிழ்வுடன் கழகத் தொண்டு ஆற்றிவருக" என நல்லுரை வழங்கி வழியனுப்பினார்.
அவர் கூறியவாறு நடுவணரசு ஆணை வரவே வரிவிலக்கு வாய்ப்புக் கிட்டியது. வருமானவரி ஆணையர் தொடர்ந்திருந்த வழக்குகள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பெற்றன. வாங்கியிருந்த மிகை வரியையும் திருப்பிக்கொடுக்கக் கட்டளையிட்டார். அது முதல் ஆண்டுதோறும் கழகம் அறத்துக்கு ஒதுக்கும் தொகைக்கு வரி விதிக்கப் பெறுவதில்லை.
எதிர்பாராத இவ்விடையூற்றை விலக்கிக்கொள்வதற்கு எத்தனை பாடுகள்! எத்தனை முயற்சிகள்! எத்தனை மனத்துயர்கள்! விலக்காணை பெற்ற அளவில் பட்ட துயரெல்லாம் பறந்து போதலுடன் வெற்றி மகிழ்வும்ஏற்படுதல் இயற்கைதானே!