உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

101

"இக்குற்றச்சாட்டு பொருத்தமுடையதன்று; வள்ளுவர், உலகில் அமைந்த பல குமுகாயங்கட்கும், பல அரசுகட்கும் படிநிலைகள் அமைத்து அவ்வந் நிலைகளிலேயே வெற்றி காண வழிவகுக்கிறார். அத்தகு படி நிலைகளிலே ஒன்றுதான் பொதுவுடைமை. அது வள்ளுவனார் வகுத்த படிநிலைகளில் ஏழாகவோ எட்டாகவோ ஆறாகவோ இருக்கலாம். ஆனால், வள்ளுவனாரின் உச்சிப்படி நிலை முடிந்த முடிவுப் படிநிலை குறளியக் குமுகாயம் - குறளிய ஆட்சி" என்று பல சான்றுகளைக் கூறி, பொதுவுடைமையினும் மேம்பட்டது குறளியம் எனத் தமது நடுவர் உரையாக - தீர்ப்பாக வழங்கி அனைவரையும் சிந்திக்க வைத்தார். திருவண்ணாமலை திருக்குறள் பேரவையில் 23-8-81இல் குறளின்பம் என்னும் தலைப்பில் விரிவுரையாற்றினார்.

13-9-81 இல் நிகழ்ந்த திருச்சி மாவட்டத் திருக்குறள் பேரவை மாநாட்டில், குறளின் கருத்துக்களை நடைமுறைப்படுத்த நாம் செயல்பட வேண்டும். இலக்கியமாகப் போற்றுகிறோம்; இனி அதை இயக்கமாக வளர்த்திட வேண்டும் என்று விழா நிறைவுத் தலைமையுரையில் கூறினார். இது, அடிகளார் கருத்தை வேலா ஏற்றுக் கொண்டு இயக்கமாக்க முந்துநின்ற முடிபாகும்.

-

15-11-81 இல் குழித்தலையில் தமிழ்க் கா.சு. விழா. அதில் சிந்தனை அரங்கத் தொடக்கவுரை யாற்றிய வேலா, "விழா நாயகராகிய கா.சு. நிழற்படம் ஏக்கத் தோற்றமாக இருப்பது போல் தலைமை ஏற்றுள்ள குன்றக்குடி அடிகளார் போரூர் அடிகளார் ஆகியோரும் ஏக்கப் பார்வையிலே உள்ளனர். கரணியம் இவ்விழிந்ததமிழ்க் குமுகாயம் பண்டை நாளைப்போல் என்று பாங்குறுமோ என்னும் ஏக்கந்தான்; எப்படி அதைத் தீர்ப்பது என்பதுதான்! அதற்கு முதற் கட்டமாகக் கோயிலில் தமிழ் வழிபாட்டு முறையை உண்டாக்குதலும், காசி திருக்கோ கர்ணம் போல் இறையுருவைத் தொட்டு வழிபாடு செய்தலும் இடைத்தரகரை வழிபாட்டில் ஒழிப்பதுமாகும்" என்றார்.

அடிகளார் தம் தலைமை உரையில், "வேலா போன்றவர்கள் இதற்கு எழுச்சியூட்டிக் களம் அமைக்கும் பொறுப்பை ஏற்கட்டும். அதற்கு முதல் ஆளாகத் தார் தாங்கிச் செல்லவும் களப்பலி ஆகவும் அணியமாக உள்ளேன் என்னும் சூளுரையை மேடையில் அமைந்த தமிழ்நாடு தழுவிய அவையினர் முன் வைத்தார். இக்கருத்து அரும்பினின்று மொட்டாகி விட்டது போதாகி மலர்வது எக்காலம் எனக் கலந்துரையாடியவாறே அவையினர் கலைந்தனர். (குறளியம் 2:5)