உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

3-12-81 ஆம் நாள் அடிகளார் அஞ்சலுக்கு மறுமொழியும் எழுதுகிறார்.

"தங்களின் மடலைப் பலபடியெடுத்துப் பல சிந்தனையாளர் களுக்கும் அனுப்பி உவந்தேன் குறள்வழி ஒரு குமுகாயம் தோன்றும் என்ற நம்பிக்கையும் அப்பெருங் குமுகாயத்தில் ஒருவனாய்த் தான் நான் உயிர்நீப்பேன் என்ற நம்பிக்கையும் மலர்ந்து விட்டது. இதுபற்றிய தங்களின் தொடர்ந்த நடவடிக்கைகளுக்குப் பல்லாற்றானும் உறுதுணையாக இருப்பேன்.

திருக்குறட்சமயம் இன்றுழலும் இசுலாம் கிறித்தவம் ஆகியவற்றையும் ஈர்த்துமேல் எழக்கூடிய சமயமாக மலர வேண்டும். பார்ப்பனியம் அறவே நீக்கப் பட்டதாயும்சிவனியம் திருமாலியங்களை உள்ளடக்கிச் சேர்த்து விட வல்லதாயும் அமைதல் வேண்டும். அறம் என்பதைச் செயல்களில் இருந்து நெஞ்சத்துடைமையாக்க வேண்டும். பொருளைச் சமன்மைக் குமுகாயத்திடையே காணவேண்டும். இன்பத்தை இல்லறத்திலே தூய்த்துணரல் வேண்டும். தமிழ்த்தென்றல் திரு.வி.க. கருதியது போல் திருக்குறள் பாக்களுக்குக் காலத்துக் கேற்ப நன்மைகளைப் பயக்கும் தீதில்லா உரைகளை உருவாக்கிச் சிக்கெனப் பிடித்தல் தவறாது வேண்டும்.

அத்துடன் ஒரு நிறம் வேண்டும், ஒரு முறை (அனைத்து நடப்புகளிலும்) வேண்டும். ஒரு வல்லொலியும் வேண்டும். ஒருவர்க்கு ஒருவர் இனங்கண்டு கொள்ள ஓர் அடையாளமும் வேண்டும். அவர்களோடு இயங்கக் கொள்கை மிகு இளைஞர் அணியும் வேண்டும். கடவுள் மறுப்பாளர்களில் இணைந்து விட்டுத் திணறுவோரும், பகுத்தறிவாளர்களில் ஏதோ ஆற்றல் என்ற ஒன்றை ஏற்போரும், பார்ப்பனியம் இல்லா ஓர் புதிய அமைப்புக்கு ஏங்கும் உள்ளத்தோரும், தனிச்சிவனியம், தனி மாலியம் என்று சிந்திப்போரும் திருக்குறட் சமயத்தில் உடனடிப் புகுந்து கொள்கை வழி உருப்பெறலாம். பார்ப்பனியத்தை மேற்கொண்டவரும் தம் கயமை அழித்து மனம் திருந்தி பூணூல் அறுத்து, போலி மைப் பார்ப்பனியத்தை மனதார விலக்கி மாந்த உணர்வுடன் வருவோரும் ஏற்கப்படலாம். இவை எல்லாம் தங்கள் சிந்தனைக்கு வைக்கப்பட்டனவே ஒழிய முடிவுகள் அல்ல என எழுதினார். (2:6:6)

ஆய்வுகள்

திருக்குறள் சமயம் குறித்த அஞ்சல்கள் வந்தன; பெருகின; நேர்காணல்களும் நிகழ்ந்தன; கருத்தரங்குகளும் கிளர்ந்தன.