உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

115

கூடேம் என்று, முரண்கூடாரங்களொடு முந்து முந்து முனைந்து நின்று இனங்கெடுக்கும் கட்சிகளின் காட்சிகள் நாம் அறியா தனவா? ஆதலால், மொழி, இன, வழிக் - காவல்களில் நாம் நம்மை ஈகம் செய்தும் கூட ஒன்றியிருத்தல் ஆக்கமாம்! இல்லையேல் தேக்கமாம் என்பதன்றி, இன்கேடுமாம் என்பதே.

இனிக் குறளியம் குறித்துக் காண்போம்.

குறளியம் (அறிவாண்மைத் திங்கள் இதழ்)

திருக்குறளின் விளம்பரக் கருவியாகவும், அறிவு நல வளர்ப்புக் கலைக் கழகமாகவும் தொடங்கப்பட்டது 'குறளியம்'. குறளியக் கொள்கை இன்னதென்றும், அதனை வெளியிட் டுரைத்த அடிகளார் உரை இன்னதென்றும், குறளியம் பிறந்த வகை இன்னதென்றும் - முன்னரே அறிந்துள்ளோம்.

குறளியம் தொடங்கி ஒன்பான் ஆண்டுகள் நிரம்பி, இது கால் பத்தாம் ஆண்டில் நடையிடுகின்றது. தொடக்க முதலே, அதன் வருவாய் கொண்டு இதழ் நடத்த இயலாது என்பதை வேலா அறிவார். ஆதலால், அதன் உறுப்பினர் எண்ணிக்கை உரிய அளவை எட்டுமட்டும் கைப்பொருள் கொண்டு வெளியிடுதல் என்னும் உறுதியைக் கொண்டமையாலும், அச்சக வாய்ப்பும் வணிக நிறுவன அமைப்பும் ஏந்தாக இருந்து வருதலாலும் இடையறவுபடாமல் இயல வாய்ப்பாயிற்று. (குறளியத்தால் உண்டாகும் பொருளிழப்பை அறிய விரும்புவோர் குறளியம் 9:7

பக் 24-25 காண்க).

இதுகாறும் திங்கள் இதழாகிய குறளியம், 117 இதழ்களை வெளியிட்டுள்ளது. வரும் ஆகத்துத் திங்களிதழ் 11 ஆம் ஆண்டின் தொடக்க இதழாக அமையும். ஆண்டு 'வேல்' என்றும், திங்கள் 'வெற்றி' என்றும் வரும் இதழ் இந்நாள் வேல் 10 வெற்றி 9 ஆகும்

(1-4-1990).

ஆசிரியர் உரை

இந்நூற்றுப் பதினேழு இதழ்களில் ஆசிரிய உரையாகவும் துணையுரையாகவும் 179 கட்டுரைகளும் குறுங்கட்டுரைகளும் வரைந்துள்ளார் வேலா. இவற்றுள் சில செய்திகள் மட்டுமே, குறித்த கால அளவில் நின்று பயன் செய்பவை; மிகப்பல, நிலைத் தக்க தொகுப்பாகித் தமிழ்வளமாக நின்று பயன் செய்பவை.