உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

மக்கள் தொழில் விரிவு :

ஐயா குப்பு முத்து அவர்கள் தம் அறிவறிந்த மக்கள் குடும்பப் பொறுப்பும் தொழிற் பொறுப்பும் ஏற்கும் நிலையை அடைந்த அளவில் அவர்களிடம் தம் பொறுப்புகளை விட்டுக் கண்காணித்து அறிவுரை கூறும் அளவில் அமைந்தார். மக்கள், கல்வித் திறம் செயல் திறம் ஆகியவற்றால் கால நிலைக்குத் தக வணிகத்தை விரித்தனர். உயர்ந்த துணிவகைகளை உருவாக்கி உள்நாட்டு வாணிகம் புரிவதோடு வெளிநாட்டு வாணிகம் செய்வதிலும் தலைப்பட்டனர். தில்லி, பம்பாய் முதலிய உள்நாட்டுப் பெருநகரங்களோடும் இங்கிலாந்து சுவீடன் முதலிய வெளிநாட்டோடும் வணிகம் செய்து வருகின்றனர். இவ்வகையில்,

"தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்.”

என்னும் தந்தையார் கடமையும்,

"மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை எந்நோற்றான் கொல்லெனும் சொல்.”

என்னும் மைந்தர் கடமையும் ஒருங்கே நிறைவேறலாயின. அறக்கட்டளை அமைத்தல் :

குடி நலம் காத்த முத்துவுக்குத் தந்தையார் வழியே ஏற்பட் டிருந்ததும் தம்பேருளத்தால் வளர்ந்திருந்ததும் ஆகிய பொது நல நாட்டம் மிகுந்தது. தாம் ஓர் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என விரும்பினார். அப்பொழுது மக்களும் தக்க நிலையை அடைந்திருந்தனர். துணைவியாரும் உடனிருந்தார். குடும்ப ஒட்டுமொத்த எண்ணமாகவே அறக்கட்டளை அமைக்கும் திட்டமும் உண்டாகியது. அதனை எப்படி அமைப்பது?

முத்து தம் அண்டை வீட்டாரும் அன்பரும் ஆகிய சண்முக சுந்தரம் அவர்களிடம் தம் அறக்கட்டளை ஆர்வத்தை உரைத்தார். வேலா. அரசமாணிக்கனார், தம் தந்தையார் வேலாயுதனார் பெயரில் பலப்பல அறக்கட்டளைகளைப் பள்ளிகள் கல்லூரிகள் ஆகியவற்றில் அமைத்துத் தொண்டு செய்து வருவதை எடுத்துக் கூறி அவரைக் கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்றார்.