உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா

249

உருவாக்க உரூபா 25000 ஆகும் என்ற கணக்கீட்டில் ஒவ்வோர் அறை கட்டித் தந்துள்ளார். அவ்வகையில் பள்ளியூற்று பதினகப் பள்ளி. கொங்கு பதினகப்பள்ளி என்பவை குறிப்பிடத் தக்கவை.

நசியனூர் மேனிலைப் பள்ளிக்கும் உதவ முன் வந்தார் முத்து. ஓர் அறைக்குப் பதினைந்தாயிரம் போதும் என்று அவர்கள் சொல்லியமையால் அத்தொகையை வழங்கியுள்ளார்.

தனி ஒருவருக்கு வழங்கும் கொடையிலும் இக்கொடை வழி வழிப்பெருமை சேர்ப்பது வெளிப்படையாம். பயிலும் மாணவர் உள்ளத்தில் தாம் பயின்ற பள்ளி நினைவும் வகுப்பறை நினைவும் கற்பித்தோர் நினைவும் பசுமையாக இருப்பவை, எத்தகு உயர்வு பெற்றாலும் அவ்வுயர்வுடன் தாமும் உயர்ந்து நிற்பவை இந்நினைவுகளாம். அவ்வாறாகத் தமக்குத் தண்ணிழல் தந்த வகுப்பறை நினைவு பசுமை மிக்கதாக என்றும் இருப்பதுடன் கொடையாளர் பெருமையைப் போற்றவும் அக்கொடைஞரைப் போலத் தாமும் கொடைஞராகும் வளத்தையும் உளத்தையும் ஒருங்கே பெறவும் தூண்டுதலாக அமையும்.

கற்பவர்க்கு ஏடு எழுத்தாணி உடை உணவு முதலியவை கொடுத்த கொடையாளரை நூல்வல்லவரெல்லாம் விரும்பி வந்து தம் நூலில் எழுதுவர் என்று ஏலாதி இயம்பும்,

“ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம்

பேணொடு எண்ணும் எழுத்திவை - மாணொடு

கேட்டெழுதி ஓதிவாழ் வார்க்கீய்ந்தார் இம்மையின் வேட்டெழுத வாழ்வார் விரிந்து

என்பது அது (63)

“வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்"

என்பது திருக்குறள், புகழாளரைச் சாவா உடம்பினர் என்பது திரிகடுகம் (16)

இளமையில் கல்வியைப் பெரிதாக எண்ணாத முத்துவுக்கு இவ்வுணர்வு பெருகியமை காலச் சூழலின் விளைவாகும். தம் மக்களை நன்றாகப் படிக்க வைக்கத்தானே ஈரோட்டைத் தேடினார். பின்னரும் படித்த மருமக்களைத் தாமே கொண்டு கொடுக்க விரும்பினார். அறிஞர் அண்ணா "மாறமாட்டேன் என்பவரும் தம்மை அறியாமலே மாறிவருவது இயல்பு" என்றார்.