உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

குறளாய மாடிப்பகுதியிலேயே இயற்கை நல மருத்துவ நிலையத்தை உருவாக்கினார். "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்" என்று சொன்ன மாமணி வள்ளுவரின் கொள்கைப் பரப்பு நிலையமான குறளாயம் இயற்கை நலங்காக்கும் நிலையமாகவும் இணைந்து கடனாற்றியது.

மருத்துவமனையை விரிக்க வேண்டும் எண்ணம் ஏற்பட்டது முத்துவுக்கும் மருத்துவர்க்கும். நோயர்கள் தங்குவதற்குத் தக்க வாய்ப்புடனும் மருத்துவர் குடியிருந்து கண்காணிப்பதற்குத் தகவும் மனை பார்க்கப்பட்டது. ஆங்குக் குப்பு முத்து இயற்கை நல மருத்துவ நிலையம் சீரோடும் சிறப்போடும் இயங்கலாயிற்று. உடம்பினுள்ளே உறுபொருள் கண்டேன்.

என்றும், "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்றும் கூறும் திருமூலர் ஊனுடம்பு ஆலயம்" என்றும் கூறினார். உயிர்களுக்கு உதவும் திருப்பணியே தெய்வப்பணி எனக் கொண்ட ஏந்தல் முத்து, இயற்கை நல வாழ்வைக் கடைப்பிடிக்கிறார். பிறரும் கடைப்பிடிக்கத் தூண்டுகிறார்.

ஓட்டம் ஓட்டமாக வரவேண்டும்; அந்த ஓட்டத்திலேயே நோய் ஓட மருத்துவம் செய்யவும் வேண்டும் என்னும் பரபரப்பு உலகம் அல்லவோ இது. அப்படி வருவார்க்கு ஆர அமரக் கடைப்பிடிக்க வேண்டிய இயற்கை மருத்துவம் செய்யக் கட்டளை இடமுடியாமே. அவர்கள் விரும்பியவாறு ஏதாவது உடனே செய்தாக வேண்டுமே! அதற்காக ஆங்கில மருத்துவம் வல்லாரை ஞாயிறுதோறும் நேர்முகமாகி (முகாம்) உதவச் செய்கின்றார் முத்து.

மருத்துவ நேர்முகம்

இயற்கை இறை நம்பிக்கையுடைய முத்துவுக்கு எவரும் உற்றார் உறவினர்தாமே! அப்பெருங்குணத்தால் ஈர்க்கப்பட்ட மருத்துவர்கள் மிகப்பலர். முத்துவின் தொண்டுக்குத் தாமும் துணையாகி உதவ முன்வந்தனர். அவர்களுள் தவத்திரு. சத்தியசாயிபாபாவின் பற்றுமை கொண்ட மருத்துவர்கள் சிலர்தாமே இலவயமாக ஞாயிறு தோறும் வந்து மருத்துவத் தொண்டாற்ற இசைந்தனர். கடந்த ஐந்தாண்டுகளாக, முத்துவின் பிறந்த ஊரான செங்கோடன் பாளையத்தில் அத்திருத் தொண்டு திகழ்ந்து வருகின்றது.