உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

31

இப்பொழுதும் அச்செய்திகள் பளிச்சிடுகின்றன! வேலாவின் உணர்வு 'படக் காட்சி' காண்பது போல் இப்போதும் அக் கண்ணில் ஒளிர்கின்றது.

இவ்வீறு எப்பொழுது அரும்பியது?

ஈரோடு மாசன உயர்நிலைப் பள்ளி!

பத்தாம் வகுப்பு!

இடைவேளை நேரம்!

ஒரு மாணவனை மற்றொரு மாணவன் ஓங்கி அறைந்து விட்டான்!

பள்ளிக்குள் நடந்த நிகழ்ச்சி!

உடனே தலைமைக்குச் சென்றது; அடிப்பட்டவன் கண்கலங்கி நின்றான். அடித்தவன் 'இவ'னெனக் கூறினான். "கொண்டுவா அவனை" என ஆணை பறந்தது!

அடித்தவன் அழைத்துச் செல்லப்பட்டான்: அடிபட்டவன் சினமாறாது நின்றான்!

"ஏன் அடித்தாய்?" - பிரம்பு விளையாடும் என்பது அவனுக்குத் தெரியும்! ஆயினும், துணிந்து கூறினான் அடித்தவன் "நான் அவனை அடித்தேன்; உண்மை! ஆனால், அவன் என் நெஞ்சில் அறைந்தானே அதைத் சொன்னானா?"

"நெஞ்சில் அறைந்தானா?

தலைமையாசிரியர் பார்வை, அடிப்பட்டவன் பக்கம் திரும்பிற்று! அவன் நடுங்கினான்! "இல்லை! பொய்" என்றான். அடித்தவன் பக்கம் திரும்பினார் தலைமையாசிரியர்" என் மார்பில் கையால் அடித்திருந்தால் பொறுத்திருப்பேன்: ஆனால் நாவால் -சொல்லால் -என் நெஞ்சில் அறைந்தான்.

"என்ன சொன்னான்?

"தமிழைப் பழித்தான்; தடுத்தும் பழித்தான்."

"பழித்துச் சொன்னாயா?"

தலை தாழ்ந்தான் அடிப்பட்டவன்!