உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

ஆர்வம் அத்தகையது! அவர் வேண்டுதல் வீண்போக வில்லை. ஆண் மகவொன்று பிறந்தது; அதுவே சிவலிங்கனாராம் வேலா அரசமாணிக்கனாரின் தமையனார். அடுத்துப் பிறந்தவர் வேலா. அரசமாணிக்கனார்; பின்னே பிறந்தவர் தங்கை சரசுவதியார், சிவலிங்கனார் சிவலிங்க புத்தக சாலை உரிமை யாளராய், தந்தையார் தொடங்கிய கடையில் பொத்தக வணிகராகத் திகழ்கின்றார். அவர்க்கு ஆண்மக்கள் மூவருளர்.

தங்கை சரசுவதியார் திருச்செங்கோட்டில் அ. சித்தையனார் வாழ்க்கைத் துணையாய் நன்மக்கள் நால்வர்க்குத் தாயாய்த் திகழ்கின்றார்.

வேலா பிறந்தார்

அரச மாணிக்கனார் 20-12-1937 ஆம் நாள் திங்கள் கிழமை பகல் 12-20 மணிக்குப் பிறந்தார். அவர்க்கு, அர்த்தநாரி எனப் பாட்டனார் பெயர் சூட்டப்பட்டது. ஆனால், பாட்டியார்,ராச மாணிக்கம் என வழங்கினார்! பாட்டியார் ஆர்வப் பேருள்ளம் எத்தகைத்து என அப்பெயர் சூட்டு அமைகிறது!

அந்நாளில் சேலம் நகரில் இராவ் பகதூர் (S.P.) இராசமாணிக்கம் என்பார் ஒருவர் இருந்தார். அவர் உறவினர்; சிறந்த தொண்டர்; வீரசைவத் தோன்றல்; நீதிக்கட்சியின் சீர்த்தியர்; மாவட்ட ஆட்சிக் கழகத் துணைத் தலைவர், இவர்தம் குடும்ப இல்லங்களில் காந்தியடிகள் தங்கிய பேறுண்டு. இவர் பெயரை நினைந்தே தம் பேரர்க்குப் பேர் சூட்டினாராம் பாட்டியார்! அவர் தம்பேருள்ளப் பெருக்கன்றோ இது!

'பீரம் பேணிற் பாரம்தாங்கும்' என்பது கொன்றை வேந்தன்.பீரமாவது தாய்ப்பால்; பீரம்பேணலாவது தாய்ப்பால் நிரம்பவுண்டு வளர்தல். பாரம் தாங்கும் என்பது பொறுப்புக் களை யெல்லாம் தன்மேல் அள்ளிப் போட்டுக் கொண்டு சுமந்து வாழும் என்பது!

அரசமாணிக்கம் இளமையிலே ஆட்டம் பாட்டம் சுறு சுறுப்பு - துறுதுறுப்பு! இவற்றைக் கண்ட அன்னையார் உள்ளுள் பூரிப்பார்!

"ஒன்றரை, ஒன்றேமுக்கால் அகவை வரை பாலுண்ட பய” னெனப் பல்கால் உரைப்பார்!