உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

45

நான் சொன்னதில்லையே என்றார். இந்நிகழ்ச்சி மாணிக்கத்தின் நெஞ்சில் பசுமையாய்ப் பதிந்தது. வீர சைவக் குடிப்பிறப்பின் பெருமை மகிழ்வூட்டியது; பின்னே செய்த வீர சைவத் தொண்டுக்கு அமைந்த தூண்டல் ஈதென்பது தகும்.

இந்தி எதிர்ப்பு :

உயர்நிலைப்பள்ளியில் பயின்ற நாளில் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டார். இவரே மாணவர் இலக்கிய மன்றச் செயலராய் இருந்து, இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தினார். அவ்வூர் வலம் கடைத் தெருவழியாக வந்தது. கடைத் தெருவிலேயே தங்கள் பொத்தகக் கடையும் உள்ளது. அங்கே தந்தையார், இருப்பர்; அவர் கண்டிப்பு மிக்கவர்; தண்டிக்கவும் தயங்காதவர்; ஆதலால் அதனைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு ஊர்வலத்தை நடத்தி வந்தார். அதற்குள் தம் மைந்தரே ஊர்வலத்தைத் திரட்டிக் கொண்டு முழக்கத்தோடு முன்னால் வருவதை வேலாயுதனார்க்குச் சொல்லி விட்டனர். அவர் ஊர்வலம் வரும் வழியில் விழிவைத்து நின்றார். மாணவர் முழுக்கமும் வரிசையும் மெய் சிலிர்க்கச் செய்தன! இவர்களுக்கு இத்தனை துணிவா? இதன் தலைவன் என் மகனா?' என எண்ணி ஊர்வலத்தின் முன்னும் பக்கமும் கண்ணோட்ட மிட்டார். மாணிக்கத்தை முன்னும் காணவில்லை! பக்கங்களிலும் காணவில்லை! பின்னும் காணவில்லை பின் எங்கே?

"என் பிள்ளை இவ்வூர்வலத்தில் பங்கு பெறவில்லை" என்ற அமைதியில் வேலாயுதனார் திரும்பினார். அடுத்த தெரு முகப்பில், அரச மாணிக்கர் முன் வரிசையில் சென்று ஊர்வலத்தில் ஏறுநடை கொண்டார்! "தந்தையார் தம்மை ஊர்வலத்தில் கண்டால் மேலே செல்ல விடமாட்டார்; பல பேர் முன்னி லையிலும் கண்டிப்பார், தண்டிக்கவும் செய்வார்; அச்செயல் எனக்குப் பழக்கப்பட்டது. எனினும் ஊர்வலத்திற்கு இடை முரிவாகவோ தடையுற்றதாகவோ ஆகிவிடக் கூடாது" என்பதால் தம் கடைப்பகுதி வருவதற்கு முன்னரே வேறொரு தெரு வழியே ஒதுங்கிச் சென்று கடைப்பகுதி முடிந்த தெருவில் தலைப் பட்டுச் செல்லும் உத்தியைக் கொண்டார். எடுத்த பணியைத் தொடுத்து முடிக்கும் சூழ்ச்சித் திறம் இளமையிலேயே வல்லார் இவர் என்பதன் சான்றுச் செய்தி இது!