உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

பள்ளி இறுதி வகுப்பில் இவர் பயிலுங்கால், "வாழ்வாங்கு வாழ" என்னும் தலைப்பில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதர் பேசிய பேச்சு வயப்படுத்திற்று; வாழ்வியல் வழி இதென விளக்கிற்று. அதுவே திருக்குறள் மீது 'தீராக் காதலை' உண்டாகிற்று!

கல்லூரி இடைநிலைக் கல்வி

பள்ளியிறுதிவகுப்பு முடித்த அரசமாணிக்கனார் ஈரோடு சிக்கைய நாயக்கர் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் (Inter Mediate) சேர்ந்து பயின்றார். கல்லூரியின் மாணவர் தலைவராக ஆனார். அப்பொழுது தமிழ்ப் பேராசிரியராகத் தமிழ் அரிமா சி.இலக்குவனார் இருந்தார். அவர் இருக்குமிடம் தமிழ் உணர்வு வீசும் என்பது நாடறிந்த செய்தி. இயல்பாகவே தமிழுணர்வில் தளிர்த்த அரசமாணிக்கர்க்கு இலக்குவனார் தொடர்பு உண்டா கியது யாப்பினுள் (வரப்புள்) அட்டிய (நிரப்பப்பட்ட) நீர் ஆயிற்று! அந்நாளிலே பெரியார், கி.ஆ.பெ. விசுவநாதம், பாவாணர், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோர் இலக்கிய மன்ற நிகழ்ச்சி களுக்கும் கல்லூரி விழாக்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

நூல் வெளியீடும் தூண்டலும்

வீரசைவ அழுத்தமிக்க வேலாயுதனார்க்குத் திருவள்ளுவர் மேல் அளவு கடந்த பற்றுண்டு. வணக்கத்திற்குரிய சிவப்பிரகாச அடிகளாரே, "எம் அடிகள் வெண்குறள் நேரடியிரண்டும் எம் தலையில் இருத்தும் இறை" என்று பாராட்டும்பெற்றியது திருக்குறள் என்பதை உணர்வார். ஆதலால், திருக்குறள் மூலத்தை வெளியிட்டார். புலவர் குழந்தையைக் கொண்டு "வள்ளுவர் வாசகம்" என வகுப்பு நூல் வரிசை உண்டாக்கினார். "வள்ளுவர் இலக்கணம்" என வகுப்பிலக்கண வரிசையும் உண்டாக்கினார். இவை அகத் தூண்டலாய் இருப்பினும் "வாழ்வாங்கு வாழ வாய்த்த நூல் வள்ளுவம்" என்னும் கருத்தை கி.ஆ.பெ.வி. மொழிந்தமை அரசமாணிக்கர்க்குப் பசுமையான கருத்தாயிற்று. கடைப்பிடியாகக் கொள்ள வேண்டும்என்னும் தூண்டுதலும் ஆயிற்று!

அந்த ஒரு மணி

கல்லூரி மாணவர் தலைவராக மாணிக்கம் இருந்தார். அவர் தலைமையேற்க அமைச்சர் சி. சுப்பிரமணியனார்