உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

59

ஆனால் அப்பணியை நச்சும் பணியாக ஆக்கிக் கொண்டவர் வேலா. அத்தனை மெய்ப்புகளையும் தாமே பார்க்கவும், பிறர்க்கு வழிகாட்டவும் தேர்ச்சி பெற்றார். நூலாசிரியர்கள் பேரா சிரியர்கள் விடும் சொற்றொடர்ப் பிழை, சந்திப்பிழை முதலிய வற்றைத் திருத்தும் தனிப்பெரும் திறமும் பெற்றார். தாம் சென்னையில் தங்கிய காலத்தில் அகராதி முதலிய கருவி நூல்களைக் கையகமாகக் கொண்டிருந்தமையால் அவை பிறர்க்கும் உதவியாய் அமைந்தன.

திருமணம்

அரசமாணிக்கர்க்கு அகவை 24. அவர்க்குத் திருமணம் செய்து அவாவினார், வேலாயுதனார். குடும்பத்திற்கும் பொறுப்பு ஏற்று நடத்தத்தக்க பெண்மணியார் வேண்டியிருந்தது. தக்க இடத்தைக் கருதினார். தம் பெரியப்பா மகளும் அத்தையின் மருமகளுமாகிய செல்லம்மாள் பவானியில் இருந்தார். அவர்தம் அருமைத் துணைவர் வீ.ந.சிட்டிலிங்கம் என்பார். இவர், ஓட்டன் காலந்தொட்டே கொடுக்கல் வாங்கல் கொண்ட உறவுக் குடி உரிமையினர். இனிய அன்பினர்; அறத்தின் வாழ்வினர்; வழிவழித் தொடர்பினர்; அவர்கள் செல்வியார் சந்திரா என்பார். குடிவழிச் சீரெல்லாம் ஒருங்கு கொண்டவர்; எட்டாம் வகுப்பு வரையும் கற்றுத் தெளிந்தவர்; தம் குடும்பத்துக்குத் தக்க குணச் செல்வியர்; அவர்க்கும் அரச மாணிக்கர்க்கும் சீருற மணம் நடாத்திச் சிந்தை மகிழ்ந்தனர். திருமணம் நிகழ்ந்த நாள் 19-11-1961. மனை நலம்

மனைக்கு விளக்காகிய சந்திரா அம்மையார், சமையல் திறத்திலும் தேர்ச்சி மிக்கு விளங்கினார். பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பழகியமையால் வருவிருந்தோம்பும் தகைமையில் தலை நின்றார்! வீட்டுப் பொறுப்பை முழுமையாக ஏற்று நடத்தும் பொறுப்பமைந்த புகழ்த்துணை வாய்க்குமானால், ஆடவர் தம் கடமைகளில் முழுமையாக ஈடுபடலாமே! தலைநிமிர்ந்து நடக்கும் தகவு, வாழ்க்கைத் துணை வழங்குவதால் ஏற்படுவதே என்னும் வள்ளுவம் எத்தகைய தேர்ச்சிமிக்கது!

உடம்போ டுயிரிடை என்னமற் றென்ன மடந்தையொ டெம்மிடை நட்பு”

என்னுமாறு இல்லறம் இனிதின் இயல்வதாயிற்று.