உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சூயசுக் கடற்கால் நிறைவின் பின் செய்யப் பெற்ற வளர்ச்சித் திட்டங்களைக் குறிப்பிடுக.

வீட்டைக் கட்டிமுடித்த பின்னரும் வேறு சில வேலைகள் தொடர்ந்து செய்யவேண்டி இருக்கும். வண்ணம் பூசுதல், தோட்டம் அமைத்தல், மின்னிணைப்புச் செய்தல், நிலைப் பேழைகள், தளவாடங்கள் வாங்கி ஏற்ற முறையில் அமைத்தல் - இன்னவாறு பல பணிகள் தொடர்ந்து நிகழும். அதுபோல் சூயசுக் கடற்கால் திட்டம் நிறைவேற்றப் பெற்ற பின்னரும் சில வளர்ச்சிச் செயல்கள் நிறைவேற்றப் பெற்றன. வளர்ச்சிக்கு எல்லை இல்லை அல்லவா!

அறிவியல் வளரவளரக்கப்பல்களும், உருவிலும் அமைப்பிலும் வளர்ச்சியடைந்து வருகின்றன. ஒருபெரு நகரமே ஊர்ந்து செல்வது போலச் செல்லும் பெரும் கப்பல்களும் உண்டாகி விட்டன. அவற்றைக் கடற்கால் வழிச் செலுத்த வேண்டுமானால் அதன் ஆழ அகலங்களை மிகுதிப்படுத்துதல் வேண்டும். தொடக்கத்தில் 8 மீட்டர் ஆழமும் 22 மீட்டர் அகலமுமாக இருந்தது கடற்கால். அது 1885-ஆம் ஆண்டில் 8 1/2 மீட்டர் ஆழம் ஆக்கப்பெற்றது. பின்னர் அதுவும் போதாதென்று 9 மீட்டர் அளவுக்கு அகழப் பெற்றது. அகலம், சயீத் துறைமுகத்தில் இருந்து கைப்பேரி வரைக்கும் 65 மீட்டர் ஆகவும், அதற்குத் தெற்கே 75 மீட்டர் ஆகவும் வேறுசில இடங்களில் 80 மீட்டர் ஆகவும் சீர்திருத்தி அமைக்கப்பெற்றது. 1913-ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெருங் கப்பல்களும் எளிதில் மிதந்து செல்லுமாறு ஏறத்தாழ 17 மீட்டர் அளவுக்கு ஆழமாக்கப்பட்டது.

ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்குக் கப்பல் செல்லும் போது எதிரே வரும் கப்பலுக்கு இடம் தருதல் வேண்டும். அத்தகைய கடவு இடங்களில் மட்டும் ஒருகல் அளவுக்குக் கடற்கால் அகலம் முன்னர் இருந்தது. கடற்கால் விரிவுப்பணி தொடங்கிய பின்னர் பெரும்பாலான இடங்களில் ஒரு கப்பல் நின்று மறுகப்பல் கடக்கும் வாய்ப்பு உண்டாயிற்று.