உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு கடற்கால்கள்

97

முதற்கண் போரொளி விளக்குடைய கலங்கள் மட்டுமே இரவுப்பொழுதில் கடற்காலில் செல்ல அனுமதிக்கப்பெற்றன. பின்பு, காலின் இருகரைகளிலும் ஒளி விளக்குகள் அமைக்கப் பெற்றன. ஆதலால் எந்தக் கப்பலும் இரவில் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது.

சூயசுக் கடற்கால் பணி நிறைவேறிய நாளினும் இந்நாளில் அறிவியல் வளர்ச்சி மிக்கோங்கியுள்ளது. அதற்கேற்பக் கடற்கால் புதிய வளர்ச்சிகளைப் பெற்றது. சயீத் துறைமுகத்தில் கப்பல் தங்கு துறைகள், ஏற்றி இறக்கும் பொறிகள், பழுது பட்ட பொறிகளைச் செப்பம் செய்வதற்குதிய பட்டறைகள் ஆயன நிரம்பிய துறையாக மாறியது. சிறந்த கலங்கரை விளக்கம் ஒன்று அமைக்கப்பெற்றது. 2070 கெசத்தில் ஒன்றும் 2730 கெசத்தில் ஒன்றுமாக இரண்டு அலை தாங்கிகள் சயீத் துறைமுகத்தில் கட்டப்பெற்றன.

கடற்காலை அன்றித் துறைமுகத்திலும் பல விரிவுப் பணிகள் செய்யப்பெற்றன. 850 கெச நீளமுள்ள பெரிய அலைதாங்கி அமைத்தது, சூயசில் நடைபெற்றுள்ள விரிவுப் பணிகளில் தலைமையானதாகும். மேலும். எகிப்திய சுல்தான் 413 அடி நீளமும் 95 அடி அகலமும் கொண்ட ஓர் இரேவு அமைத்துத் தந்தார். பி அண்டு ஓ கூட்டகத்தார் 300 அடி நீளமும் 85 அடி அகலமும் உள்ள ஓர் இரேவு அமைத்தனர்.

இத்தகைய சீர்திருத்தங்களால் விரிந்த அளவில் கடற்பயண வாய்ப்புக்கு வகை உண்டானதுடன், கட்டணக் குறைவும் நாளா வட்டத்தில் உண்டாகிக் கொண்டே வந்துள்ளது. கப்பல் அளவைப் பாரம் ஒன்றுக்கு முதற்கண் 10 வெள்ளியாகக் கட்டணம் இருந்தது. 1885 இல் பாரத்திற்கு 9 1/2 வெள்ளியாகக் குறைந்தது. 1906இல் 7 1/2 வெள்ளி ஆயது. 1928இல் சரக்கு கப்பல்களுக்குக் கட்டணம் 7 வெள்ளி என்றும் பிற கப்பல்களுக்குக் கட்டணம் 4 1/2 வெள்ளி என்றும் குறைக்கப் பெற்றது. வாய்ப்புகள் பெருக வருவாய் பெருகுகிறது; வருவாய் பெருக வாய்ப்பும் பெருகுகிறது! உலகுக்கு நலமாகிறது.

ஒரு திட்ட நிறைவேற்றம் என்பது முற்றும் முடிந்து விட்டது ஆகாது. மேலும் மேலும் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பெற்ற வண்ணமே இருக்கவேண்டிய இன்றியமையாமை உண்டா கின்றது. அதற்கு அறிவியல் வளர்ச்சியும், மாந்தர் தேவையும் காரணங்கள் ஆகின்றன. இவற்றைச் சூயசுத் திட்ட வளர்ச்சிகள் உலகுக்குத் தெளிவாகக் காட்டுகின்றன.