உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. எகிப்தின் புதுவாழ்வு

எகிப்து மிகத் தொன்மையான நாடு. உலக நாகரிகத்திற்கு வித்திட்ட நாடு. பல்வேறு இனங்களைத் தன்னகத்துக் கொண்டு இரண்டறக் கலந்த பெருமைமிக்க நாடு. மேலை உலகும் கீழை யுலகும் ஓருலகாவதற்கு நுழைவாயில் ஆக இருக்கும் கீர்த்திமிக்க நாடு. இத்தகு நாடு பன்னாட்டவர்களின் படையெடுப்பிற்கும், கெடுபிடித் தாக்குதல்களுக்கும் இடமாக இருந்து துயருற நேரிட்டது. ஆயினும் மங்காப்புகழ் படைத்த அந்நாட்டின் தொல்பழஞ் சிறப்பை மாற்றிவிட முடியாது என்பதைக் காட்டத்தக்க எழுச்சியை அந்நாடு கொண்டிருந்தது. அதைப் பற்றிக் காண்போம்.

உலகச் செல்வாக்கும் வளமும் பெறுதற்கு எகிப்தைத் தன்னகப் படுத்துவதொன்றே வழி என்று நெப்போலியன் உணர்ந்தான். அதே நுட்பத்தை இட்லரும், முசோலினியும் கொண்டனர். அதன் விளைவாக அவர்கள் தாக்குதலுக்கு எகிப்து உள்ளாயிற்று! அவர்கள் எண்ணம் நிறைவேறாமல் எகிப்தைப் பிரிட்டன் காத்தது. ஏன்? எகிப்தில் பிரிட்டன் தன் காலை வலிமையாக ஊன்றிக் கொள்வதற்கே!

தொடக்க நாள் முதல் சூயசுத் திட்டத்தை உருவாகாமல் தடுத்தும் ஒழித்தும் வருவதே தொண்டாகக் கொண்ட பிரிட்டன், சூயசுத் திட்டம் நிறைவேறியதும் கடற்காலின் மிகுதியான பங்கு களை விலைக்கு வாங்கியும், அதன் செயற் கழகத்தில் இடத்தைப் பிடித்தும் கொண்டது. உலகப்பெரு வளத்தைப்பெற எகிப்தைத் தன் கைக்குள் வைத்திருத்தல் ஒன்றேவழி என்று பிரிட்டன் கண்டமை காரணமாம்.

எகிப்து நாட்டைப் பற்றிக்கொள்ளுவதற்குப் பிற நாடுகள் கொண்டிருந்த ஆவலும், அடாச் செயலும் எகிப்திய மக்களின் தன்மானத்திற்குச் சோதனையாயிற்று. எவர் ஆண்டால் என்ன என்றிருந்த எகிப்திய மக்கள் கொதித்து எழுந்தனர். தன் தேச உடைமையைப் பிற நாட்டார்க்கு ஊதாரித்தனமாக எகிப்து மன்னர் அளித்துவிட்டார் என்னும் சீற்றம் எகிப்து மக்கட்கு