உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

செய்வோர் குடியிருப்புகள், அலுவலகங்கள் ஆகியன திட்டமிட்டுக் கட்டப்பெற்றன.

கடற்காலின் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்குக் கப்பல் எட்டுமணி நேரத்தில் சென்றுவிடுகின்றது. ஆனால் அக்கப்பல் வருதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னரே அதனை வரவேற்றகத்தக்க முன்னேற்பாடுகள் தொடங்கி விடுகின்றன. கடற்காலின் செயற் சீர்மையை விளக்கும் சீரிய சான்று இது.

கடல்கால் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போதே அடிக்கடி நிலச் சறுக்கல்கள் ஏற்பட்டன. ஆனால் திட்ட நிறை வேற்றத்தின் பின் 1916ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சறுக்கல் உயிர்களுக்கும் பொருள்களுக்கும் பேரிழப்பு உண்டாக்கிற்று. கடற்காலில் சரிந்த மண்ணை வெட்டியெடுத்து வெளியேற்றுவதற்குப் பெருமுயற்சி வேண்டியிருந்தது. ஆயினும் அயரா முயற்சியால் திட்டமிட்ட கால எல்லைக்கு முன்னரே பணியை நிறைவேற்றி யதுடன் சிறப்பாகவும் செய்து முடித்தனர். "எண்ணிய எண்ணியாங் கெய்துவர் எண்ணியர், திண்ணியர் ஆகப் பெறின்" என்பது வள்ளுவர் வாய்மொழி அல்லவா!

ஒரு கப்பல் கேதன் ஏரியில் இருந்து கடலுக்குச் செல்லும் போது 520 இலட்சம் காலன் நீர் ஏரியில் இருந்து கடலுக்குச் சென்றுவிடுகிறது. இவ்வாறு ஓர் ஆண்டுக்கு 4850 கோடி குழியடி நீர் கடலுக்குச் செல்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் ஏரிப்பரப்பின் நீர், வெப்பத்தால் ஆவியாதலாலும் வற்றுகின்றது. இவற்றை ஈடு செய்தற்கென்று கட்டப்பெற்றதே மாடன் அணைக்கட்டு என்பதாகும். அந்நீர்ப் பெருக்கம் கடற்கால் பூட்டுக்கு மட்டுமன்றி, மின்சாரம் எடுப்பதற்கும் குடிநீர் வாய்ப்புக்கும் உதவியாயிற்று.

1929ஆம் ஆண்டில் கடற்காலில் சென்ற கப்பல்கள் 6289 ஆகவும் அவற்றால் கிட்டிய வருவாய் 2,71,11,000 வெள்ளியாகவும் இருந்தது. 1952 முதல் கப்பல் எண்ணிக்கையிலும், வருவாயிலும் மிகப்பெருகியது. 1956ஆம் ஆண்டுக்குள் 25,00,000 கப்பல்கள் இக்கடற்கால் வழி சென்று உலகத் தொண்டு செய்துள்ளன.