உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

பள்ளிப் படிப்பு:- வீட்டில் அடைபட்டுக் கிடந்த இரவீந்திரர் மற்றைச் சிறுவர்களைப் போலத் தாமும் பள்ளிக்குப்போக ஆசைப்பட்டார். ஆனால் பள்ளிக்குச் சென்றதும், வீட்டைப் பார்க்கிலும் பள்ளிக்கூடமே கொடிய சிறைச்சாலையாக இருப்பதாக உணர்ந்தார்; ஆகவே பள்ளிப் படிப்பை வெறுத்தார்.

படிப்பில் வெறுப்பு:- இரவீந்திரரின் அண்ணன் மார்களுள் ஏமேந்திரர் என்பவர் ஒருவர். அவர் இரவீந்திரர், வீட்டிலேயே கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். அந்நாளில் வங்காளம், ஆங்கில மோகத்தில் சிக்கிக் கிடந்தது. ஆயினும் இரவீந்திரர் வங்கமொழியிலேயே பாடங்களைக் கற்றார். உடற்பயிற்சி, ஓவியம், ஆங்கிலம் ஆகியவனவும் அவர் படிப்பில் இடம் பெற்றன. பள்ளிப் பாடத்தைப் போலவே, வீட்டுப் பாடமும் இரவீந்தருக்குச் சுமையா யிற்று. ஆசிரியர்க்கு நோய் உண்டாகி வராமல் இருக்கமாட்டாரோ என்றும் தமக்கு நோய் வந்துவிடக்கூடாதா என்றும் ஏங்கினார். ஏட்டுப் படிப்பில் அவருக்கு இருந்த வெறுப்பு அத்தகையது.

படிப்பும் பாராட்டும்:- பள்ளியில் படிக்கும் போதே பாட்டு எழுதும் திறம் பெற்றிருந்தார் இரவீந்திரர். அருஞ்சொற்களை அமைத்து எழுதுவதும், துன்பத்தைப் பற்றிப் பாடுவதும், சிறப்பு எனக்கருதிப் பாடினார். தம் மைந்தன் திறமை கண்டு தந்தையார் மகிழ்ந்தார். தம் மாணவர் திறமையை அறிந்து பள்ளித் தலைமை ஆசிரியர் பாராட்டினார்.

நாடக நாட்டம்: பிற்காலத்தில் உலகப் பெரு மேடையே இரவீந்திரருக்குக் காத்திருந்தது. எனினும் அவரது பிள்ளைப் பருவத்தில் அவர் அண்ணன்மார், வீட்டில் நடித்த நாடகங்களை தொலைவில் நின்றே காண முடிந்தது; நாடக மேடையை நெருங்கவும் அவர்கள் விட்டது இல்லை.

இயற்கைக் கல்வி :- இரவீந்திரர் தம் தந்தை யாருடன் ஒருமுறை போல்பூருக்கும், இமயமலைக்கும் தொடர் வண்டியில் சென்றார் தொடர் வண்டிப் பயணம் அவர்க்கு மிகுந்த இன்பம் வழங்கியது. விடுதலைபெற்ற பறவை போல இன்புற்றார். தேவேந்திரர் போல்பூருக்கு அருகே அமைந்திருந்த சாந்தி நிகேதனம் இரவீந்திரரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இமயமலையின் இயற்கைச் சூழல் இரவீந்திரரின் சிறந்த கல்வி மேம்பாட்டுக்கு உதவியது. அங்கே தான் தேவேந்திரர்