உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

அவர்களுக்குக் கிடைக்காத எந்த அரிய பொருளையும் பயன் படுத்துவதை வெறுத்தார். ஏழை எளியவர்களுடன் இரண்டறக் கலந்து விட்டார் இளைஞர் ஆல்பர்ட்.

ஒரு நண்பனின் வற்புறுத்தலை மறுக்க முடியாதவராக ஒரு நாள், சுவைட்சர் வில்லை எடுத்துக் கொண்டு வேட்டைக்குப் போனார். பறவைகள்மேல் வில்லுண்டை படக்கூடாதென எங்கேயோ குறிபார்த்து எப்படியோ வில்லை வளைத்து ஏவினார். தம் நண்பன் எந்தப் பறவையையும் அடித்து வீழ்த்திவிடக் கூடாதே என்ற அருளால் அவற்றை எழுப்பிப் பறந்தோடச் செய்து இன் புற்றார். அத்துணை இளக்கமானது அவர் உள்ளம். இறைவனுக்குச் செய்யும் நாள்வழி பாட்டுரையுடன் 'இறைவனே எல்லா உயிர் களுக்கும் அருள் சுரந்து நலம் செய்வாயாக! அமைதியாக உறங்குவதற்கு அருள்புரிவாயாக' என்னும் வரிகளையும் சேர்த்துக் கொண்டு முறையிட்டார்! இளமையில் முதிர்ந்த பெருமகனார் ஆல்பர்ட் சுவைட்சர் அல்லவா!

சுவைட்சரின் தலைமயிர் எளிதில் படியாதது. எத்தனை முறை சீவினாலும் எழும்பி நிற்கக் கூடியது. அதனைக் கண்ட பணிப்பெண், "இத்தலை மயிரைப் போலவே இவன் அடங்கா தவனாக இருப்பான்" என்று கூறுவாள். இவ்வுரையால் தம்மைத் தாழ்வாகக் கருதிக் கொண்ட சுவைட்சர் ஒரு நாள் ஒரு பொருட் காட்சி சாலையில் புனிதர் யோவான் உருவத்தைக் கண்டார். அவர் தலை தன் தலைபோலவே படியாமல் இருப்பதைக் கண்டு புறத் தோற்றத்துக்கு ஏற்றபடிதான் அகத் தோற்றமும் இருக்கும்' என்பது உண்மையாக இருக்க முடியாது என்று உறுதி செய்தார். அவர் உள்ளத்தில் அமைதி உண்டாயிற்று.

1884 ஆம் ஆண்டு வரை சுவைட்சர் கன்சுபர்க் பள்ளியில் பயின்றார். பின்னர் ஓராண்டு மன்சிட் பள்ளியில் பயின்றார். உயர்நிலைப் பள்ளியில் சேர்வதற்காக இலத்தீன் மொழியைத் தனியே ஓராசிரியரிடம் கற்றார். முல்காசன் என்னும் ஊரிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

முல்காசனில் சுவைட்சரின் தந்தைவழிச் சிறிய பாட்டனாரும் பாட்டியும் இருந்தனர். அவர்கட்குக் குழந்தைகள் இல்லாமையால் ஆல்பர்ட்டை ஏற்றுப் போற்றினர். அங்கு எட்டாண்டுகள் இருந்து மிகத் திறமையாகக் கற்றார். ஆர்கன் இசைப்பதிலும் தேர்ந்தார். தம் பதினெட்டாம் அகவையில் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு தாய் தந்தையிரிடம் சென்றார்.