உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஆல்பிரட் சுவைட்சரின் மேல்நிலைக் கல்வி

இளமையிலேயே அன்பும், அருளும், இசைத்திறமும் வாய்க்கப் பெற்றவராகத் திகழ்ந்தார் சுவைட்சர். தொடக்கப் பள்ளியில் பயிலும் போதே பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுக்கும் அன்புக்கும் உரியவராக விளங்கினார்; உயர்நிலைப் பள்ளிப் படிப்பைத் தம் பதினெட்டாம் அகவையளவில் முடித்த சுவைட்சர் அதன் பின்னர் மேல்நிலைக் கல்வியில் ஈடுபட்டார்.

சமய போதகராகிய லூயி சுவைட்சரின் மைந்தர் ஆதலால் ஆல்பர்ட் சுவைட்சருக்குச் சமயப் பற்று மிக்கிருந்தது இயற்கையே. 'குலவிச்சை கல்லாமல் பாகம் படும்'! அதனால் 1893ஆம் ஆண்டில் டிராசுபர்க் பல்கலைக் கழகத்தில் மேல்நிலைக் கல்வி கற்கப் புகுந்த சுவைட்சர் சமய இயல், தத்துவம் ஆகிய இருபாடங்களையும் விரும்பி எடுத்துக்கொண்டார். இப்பாடங்களுக்கு இடையே எபிரேய மொழியை முயன்று கற்று முதிர்ந்த புலமை பெற்றார்.

கல்வி கற்றுவந்த காலையில் கட்டாய இராணுவப் பயிற்சியில் சேரவேண்டிய கடமைக்கு ஆட்பட்டார். அதே பொழுதில் உதவித் தொகை பெறுவதற்காக ஒருதேர்வு எழுதியாக வேண்டிய இன்றியமையாமையும் உண்டாயிற்று. அத்தேர்வுக்கு மத்தேயு, மார்க்கு, லூக்கா ஆகியவர்கள் அருளிய ஆகமங்களை ஆராயும் கடப்பாட்டை மேற்கொண்டார். இக்கல்வி இவர்தம் சமயத்துறை மேம்பாட்டுக்குப் பெருந்துணையாயிற்று.

சுவைட்சர் 1897 ஆம் ஆண்டில் தத்துவத்தேர்வு எழுதுவ தற்காகத் தம்மை பதிவு செய்துகொண்டார். அத்தேர்வுக்குச் செல்பவர் தம் தகுதியை நிலைநாட்டுவதற்கு ஓர் ஆய்வுக் கட்டுரை வழங்குதல் வேண்டும். 'இயேசு நாதரின் கடைசி உணவு' என்பதை ஆராய்ந்து திறம்பட எழுதினார் சுவைட்சர். அவ் ஆய்வுக் கட்டுரையில் சிறந்த தேர்ச்சி பெற்றார். அத்தேர்ச்சியும் ஆசிரியர் பரிந்துரையும் இவரைக் கோல்' என்னும் உதவித் தொகை