உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

முடிவு செய்து அதற்குத் திட்டம் தீட்டினார். இவர் திட்டத்தை ஏற்பார் அரியர் ஆயினர். தெளிவற்ற முடிவு என்றும், வேண்டாத விருப்பு என்றும், கிறுக்குத்தனமான செயல் என்றும் பலவாறு கூறினர்; குழப்பினர்; ஆயினும் ஆல்பர்ட்சுவைட்சர் தம் திட்டத்தில் இருந்து சிறிதும் மாறினார் அல்லர். 'எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு' அல்லவா!

ஆப்பிரிக்காவுக்குச் சென்று என்ன தொண்டு செய்வது? கிறித்தவ சங்க அறிக்கை வழியாக மருத்துவப் பணி செய்வதே வேண்டும் என்பதை அறிந்தார். சமயம், தத்துவம், இறை வழிபாடு இப்பணிகளிலேயே பொழுதெலாம் செலவிட்ட சுவைட்சர் மருத்துவப் பணியை உடனே ஏற்க எப்படி முடியும்? பல்லாண்டுகள் பயின்று பயிற்சி பெற்றாலல்லவோ அப்பணியை ஏற்க முடியும்? இதனி எண்ணிச் சோர்ந்தாரல்லர் சுவைட்சர். தாம் பேராசிரியராக இருந்த பல்கலைக் கழக மருத்துவத்துறைத் தலைவரிடம் சென்று தம்மை மருத்துவ மாணவராகப் பதிவுசெய்து கொண்டார்! விந்தையான செய்தி. பல்கலைக் கழகத் துறைத்தலைவர், மற்றொரு துறையின் மாணவராகத் தம்மைப் பதிகிறார்! சுவைட்சரின் பொதுப்பணி நாட்டம் அத்தகையது!

சுவைட்சர் இயற்கையாக ஏற்றுக் கொண்டிருந்த பலவகைப் பணிகளுக்கு இடையே மருத்துவக் கல்வி கற்பது இயலாததாக இருப்பினும் முயன்று கற்றார். 1911 ஆம் ஆண்டில் மருத்துவத் தேர்வெழுதி வெற்றி கொண்டார். ஓராண்டுக்காலம் மருத்துவ மனையில் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார். அக்காலத்தில் மருத்துவப் பட்டத்துக்கான ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி முடித்தார். இதற்குப் பின்னர், காங்கோவுக்குச் சென்று மருத்துவ பணி செயதற்குரிய முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்.

ஆப்பிரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்னர்த் தாம் ஏற்றிருந்த பேராசிரியர் பதவியையும், சமய போதனைப் பணியையும் விட்டு விலகினார். 'செலன் பிரசுலோ' என்னும் பெயருடைய ஒரு நங்கையை மணந்து கொண்டு, அவர்க்குத் தாதியர் பயிற்சி தந்தார். கிடைத்த பொழுதை எல்லாம் மருத்துவம் பற்றி மேலும் கற்கவும், வேண்டிய மருந்துகளைச் சேர்க்கவும் செலவிட்டார். வழக்கற்றுப் போய்க் கொண்டிருந்த ஆர்கன் இசைக்குப் புத்துயிரூட்டினார். அக்கருவி அமைப்பைப் பற்றி அரிய ஆராய்ச்சி நூல் ஒன்று