உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

நீலகண்டன் ஆயினான். அவன் 'ஆலம் உண்ட நீலகண்டன்' ஆனதால் அமரர் உயிர்தப்பினர். உயிர் அருளிய உரவோனை உயர்த்திப் பாடத்தவறவோ செய்வர்! உயர்த்தி உயர்த்தி அமரர் பாடினர்: அந்தணர் பாடினர்; அடியவர் பாடினர். கறையின் பெருமையே பெருமை!

"இதோ! சிவபெருமான் ஆண் வடிவாகமட்டுமோ தோன்று கின்றான்? மாதிருக்கும்பாதியனாக - அம்மை அப்பனாக அருட்காட்சி வழங்குகின்றான். தன் ஒரு பாதியைப் பெண்ணுக்குத் தந்தவண்மை பெரிது. அது மட்டும் அல்லவே! அப்பெண்வேறு தான் வேறு என்று இல்லாமல் தன்னுள்ளே ஒடுக்கிக் கொள்ளவும் செய்கிறானே அவன்! என்னே விந்தை!

'செஞ்சடையப்பன் திருமுடியிலே விளங்குவது என்ன? பிறை நிலா அது! அப்பிறையின் எழில் என்னே! ஒளி என்னே! நெற்றிக்கு அப்பிறையூட்டும் அழகு என்னே! அவ்வழகிலே நெஞ்சைப் பறிகொடுத்து வாழ்த்துப் பாடுவது ஒரு கூட்டமா? இரண்டு கூட்டமா? அமரர்கணங்கள் பதினெட்டும் அல்லவா அப்பிறையை வாழ்த்துகின்றன.

"இனி, பிறையைத் தாங்கிய சடையின் சீர்மைதான் என்னே! உலகத்து உயிர்களெல்லாம் காப்பது நீர். அந்நீரை வற்றிப்போகா மல்காப்பது அச்சடை! அச்சடை வாழ்க! அச் சடை அணிந்த அருந்தவத்துப் பெருந்தேவன் வாழ்க!" என்று தொடர்ந்து எண்ணினார் பெருந்தேவனார். தம் எண்ணத்திற்குத் தமிழ்க் கவி உருவம் தந்தார். அவ்வுருவம் அவர் உருவமாகப் புறநானூற்றில் நின்று நிலவுகின்றது. வாழ்க பெருந்தேவனார்.