உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

"நிலந்தந்த புல்லைத் தின்று, நீரைப்பருகிப் பாலைச் சொரியும் வள்ளற் பசுக்களைக் களப்பலியிடலாமா? கூடாது.கூடவே கூடாது. ஆகவே போர் என்றால் என்ன என்பதையே அறியாத பசுக்களை நாட்டை விட்டே கொண்டு சென்றுகாத்தல் வீரர் கடன். அப்பசுக்கள் மட்டுமோ? அப்பசுக்கள் போல் அருள் பேணும் அந்தணர்களையும் நாட்டு நலம் கருதி காத்தல் கடமை. இனி, மெல்லியல் வாய்ந்த நல்லியல் நங்கையரை அழிப்பது தகுமா? பேயும்இரங்க வேண்டிய பெண்மையை நினைத்து இரக்கம் கொள்ளாதவன் பேராண்மையாளன் ஆவானா? ஆகான்! ஆகவே, மகளிரைக் காத்தல் வேண்டும். வாழப்பிறந்த மாந்தன் தன்குடி வாழ்வுக்குரிய மகப்பேறுபெறுதல் இன்றியமையாக் கடமை. அக்கடமையைச் செய்து முடிக்காத மகப்பேறு வாய்க்காத பெற்றோர்களைக் கொல்லுதல் பெரும் பாவம்”. இப்படி எல்லாம் எண்ணி எண்ணி, சொல்லிச் சொல்லி அறப்போர் புரியும் முதுகுடுமிப் பெருவழுதி நீ வாழ வேண்டும்;நீடு வாழ வேண்டும்; பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும். எத்துணைப் பல்லாண்டுகள்? ஆடுபவர்க்கு நீடிய பரிசுகளை வழங்கியவனும் கடல்விழா எடுத்துக் களிப்புற்றவனும் ஆகிய வடிம்பலம்ப நின்ற பாண்டியனுக்கு உரிய பஃறுளியாற்று மணல்கள் எத்துணை? அளவிடற்கு அரிது! அவ்வாற்று மணல்போல் எண்ணற்கு அரிய காலங்கள் வழுதி இனிது வாழ்வானாக. "அறப்போர் பேணும் அண்ணல் ஆற்று மணல்போல் வாழ்வானாக" என்று வாழ்த்தினார் நெட்டிமையார்.

வழுதி, மன்னவன்; நெட்டிமையார், பாடும்புலவர்; புலவர் வழுதியையா இப்பாடலில்பாடி வாழ்த்தினார். இல்லை! அற நெறியை வாழ்த்தினார். வழுதி அறம் பேணுகிறான்; ஆகவே அவன் வாழ்க என்று வாழ்த்தினார், அறத்தின் மேல் அவர்க்கிருந்த காதல் அது! வாழ்க அறப்போர்! வாழ்க அறவோர்!