உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கோட்டிடை வைத்த கவளம்

கோடு என்பது பல பொருள் ஒரு சொல்; அது வளைவு, மலை, கிளை, கொம்பு, தந்தம் முதலிய பல பொருள்களைத் தரும். இங்கே தந்தம் என்னும் பொருளில் வருகின்றது. "யானையின் தந்தங்களுக்கு இடையெ தொங்கும் துதிக்கையில் வைக்கப் பெற்ற கவளம்" என்னும் பொருளில் இச்சொற்றொடர் வருகின்றது.

தகடூரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டின் ஒரு பகுதியை அதிகமான் ஆண்டு வந்தான். அவன் உள்ளத்தால் உயர்ந்தோன். ஊருணி நீர் போலவும், உள்ளூர்ப் பழ மரம் போலவும் அனைவருக்கும் பயன்பட்டு வந்தான். அவனது பேரன்புக்கும் பெருநண்புக்கும் உரிமை பூண்டவராகத் திகழ்ந்தார் ஒளவையார்.

ஒளவையார், அதிகமான் அரண்மனையில் இருந்த பொழுது களில், எப்பொழுதும் புலவர் வந்தவண்ணமாக இருப்பதைக் கண்டார். 'நேற்று வந்து பரிசில் பெற்றோமே' என்றும் எண்ணாமல் அவர்கள் மறுநாளும் வந்தனர்; அடுத்த நாளும் வந்தனர்; ஒருவர் இருவராக இல்லாமல் பலராகப் பல நாட்கள் தொடர்ந்து வந்தும் பரிசு பெற்றனர். அதிகமான் அவர்களை யெல்லாம் முதல்நாள் போலவே முகமலர்ந்து வரவேற்றுக் கொடுக்கும் வள்ளன்மையைக் கண்டு உள்ளம் உவந்தார் ஒளவையார் தம் நெஞ்சார வாழ்த்தினார்.

அதிகமானிடம் விடைபெற்றுக் கொண்டு வேறு பல இடங் களுக்குச் சென்று மீண்டும் வந்தார் ஒளவையார் அப்பொழுதில் அதிகமானை மிகுதியாகக் காணமுடிய வில்லை; அளவளாவிப் பேசமுடிய வில்லை; பரிசு பெற்று விடை பெற்றுக்கொண்டு போகவும் முடியவில்லை.

சேர வேந்தன் அதிகமான் மேல்பகை கொண்டிருந்தான். அதிகமானை அழித்து ஒழிக்கவும் திட்டமிட்டிருந்தான். ஆகவே தன் படையைப் பெருக்கிச் சேரனை அழிக்கும் முயற்சியில் முனைந்திருந்தான் அதிகமான். அதனால் ஔவையாரை முன்னைப் போல் அவனால் பேண முடியவில்லை.