உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நீலாற்றுக் காலின் வரலாற்றைத் தொகுத்தெழுதுக.

சூயசுக் கடலிணைப்புத் திட்டத்தின் முன்னோடி நீலாற்றுக் கால்வாய்த் திட்டம் ஆகும். அத்திட்டம் கி.மு. 2500 ஆண்டுக்கு முற்பட்ட திட்டமாகும். அரிட்டாட்டில், டிராபோ, பிளினி என்னும் அறிஞர் பெருமக்களின் புகழ்ச்சிக்கு நிலைக்களமாக இருந்த பேறு நீலாற்றுத் திட்டத்திற்கு உண்டு.

நீலாற்றுக்கால்வாய், 'பரோவாக்களின் கால்வாய்' என்றும் வழங்கப்பெற்றது.பண்டை எகிப்திய மன்னர்கள் ‘பரோவாக்கள்’ எனப்பெற்றனர். அவர்கள் ஆக்கிய கால்வாய் ஆதலால் அப்பெயர் பெற்றது. நீலாற்றுக்கால், நீலாற்றில் இருந்து பிரியும் 'பெலியூசக்' என்னும் ஆற்றின் கிளையான பூபாசிபிசியில் இருந்து புறப்பட்டு துமிலாத்து, கைப்பேரி இவற்றின் வழியாகச் செங்கடலில் முடிவுற்றது.

எகிப்தில் உள்ள பாரக் கூம்புகளுக்குத் (பிரமிடு) தமிழகத் தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இஃது எகிப்து தமிழக வாணிகப் பழமையை உணர்த்தும். இவ்வாணிகம் கி.மு. 2000 முதல் கி.பி. 1200 வரை சிறப்பாக நடைபெற்று வந்தது. இதுவே தமிழக மேலை உலக வாணிகமாக 19ஆம் நூற்றாண்டு வரை நிகழ்ந்தது.

பழந்தமிழக வாணிகம் இருபெரு வழிகளில் நடந்தது. சீனத்தில் இருந்து ஆசிய நடுமேட்டு நிலவழியாக எகிப்து செல்லும் ஒரு வழி. தென்கிழக்கு ஆசியாவில் இருந்து தமிழகக் கடலைக் கடந்து எகிப்து செல்லும் பெருங்கடல் வழி மற்றொன்று. முன்னை வழி, பருவமாறுதல் கேட்டாலும், கொள்ளைக் கூட்டத்தார் கொடுமையாலும் கி.பி.12ஆம் நூற்றாண்டளவில் மறைந்து போயிற்று. ஆதலால் தமிழகத்தின் ஊடாகச் சென்ற கடல்வழி ஒன்றே உலகக் கடல் வழியாக அமைந்தது.