உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு கடற்கால்கள்

83

எகிப்து கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரை உரோமப் பேரரசுக்கு உட்பட்டிருந்தது. உரோமப் பேரரசன் திராசன் நீலாற்றுக் காலை விரிவு செய்தான். உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் எகிப்து அராபியர் ஆட்சிக்கு உட்பட்டது.ஆராபிய ஆட்சியில் எகிப்துக்குத் தலைவராயிருந்த ‘அம்ரு’, கால்வாயை மீண்டும் செப்பனிட்டார். அவர் நடுநிலைக் கடல் வரை கால்வாயைக் கொண்டுசெல்லவும் கருதினார். அவர் முயற்சியும் ஈடேறிற்றில்லை.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கலிபா சாபர் அலி இசுலாமியக் கொந்தளிப்பைப் கருதிக் கால்வாயை மூடுமாறு கட்டளை ட்டார். அந்நூற்றாண்டிலேயே இராசித் என்னும் மன்னன் கால்வாயை விரிவு செய்ய முனைந்தான். ஆயினும் அப்பணியும் துருக்கியர் கடற்படை, எகிப்தின் உள் நாட்டுக்குள் வருதற்குத் துணையாகிவிடும் என்னும் அச்சத்தால் நின்றுவிட்டது. கி.பி. 1811இல் கால்வாயை மூடிவிடுமாறு முகமத் அலி என்பார் கட்டளை இட்டார். ஆனால் முழுமையும் மூடப்பெறாமல் சூயசுக் கடற்கால் வேலை தொடங்கும் வரை நீரோடிக் கொண்டும், போக்குவரவுக்குத் துணையாகிக்கொண்டும் நீலாற்றுக் கால் இருந்தது. அந்நீலாற்றுக்காலே சூயசுக் கடலிணைப்பின்போது நன்னீர்க் காலாக அகழப்பெற்றுக் கடற்காலுடன் இரண்டறக் கலந்துவிடும் பேறு பெற்றது.

கனவு காண்பது எளிது! அதனை நனவாக்குவது மிக அரிது. நல்ல கனவொன்று நனவாக எத்தனை முட்டுக்கட்டைகள் உண்டாகின்றன என்றும், நல்ல கனவு எவ்வாறு இறுதியில் ணையற்று ஓங்கி நின்று,வெற்றி கொள்ளுகின்றது என்றும் நீலாற்றுக்கால் திட்டம் உலகுக்கு உணர்த்தத் தவறாது. வாழ்க நல்ல கனவுகள்! வாழ்க நற்கனவை நனவாக்குவோர்!