உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சூயசுக் கடலிணைப்புத் திட்டம் செயல்

தொடக்கம் பற்றித் தொகுத்தெழுக.

எளிதில் நிறைவேறத்தக்க செயலையே பலரும் எடுத்துக் கொள்வர். ஆனால் சிலரோ, அரிய செயல்களையே தேர்ந்து எடுத்துக் கொள்வர்; வெற்றியும் கண்டு வீறுமிக்க நடைபோடுவர். இத்தகையவரைக் கருதியே

"கானமுயல் எய்த அம்பினில் யானை

பிழைத்த வேல் எந்தல் இனிது"

என்றார் வள்ளுவர்.

சூயசுத் திட்டம் யானைப் போரினும் உயரியது அல்லவா!

பெர்டிணாண்டு டிலெசெப்சு என்பவர் பிரான்சு நாட்டினர்; பெருஞ் செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர்; அவர் தந்தையார் அரசியல் செல்வாக்கு மிக்கவர். முகமதலி எகிப்து மன்னர் பதவிக்கு வர அவரே காரணமானவர் என்றால் அவர் தம் அரசியல் செல்வாக்கை உரைக்கவேண்டியரில்லை! பெர்டிணாண்டு இச் செல்வாக்கால் இளமையிலேயே எகிப்து மன்னர் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பு கொள்ள வாய்ப்பு இருந்தது. அவ்வாய்ப்பே சூயசுத் திட்டம் நிறைவேறத்தக்க சூழலை உருவாக்கியது எனலாம்.

டிலெசெப்சு தூதராகவும், அமைச்சராகவும் பணிபுரிந்தார். நேர்மையையும் உழைப்பையும் - பொன்னேபோல் போற்றி வாழ்ந்த அவர்க்கு எதிராகப் பொறாமைக்காரர்கள் பலர் கிளம்பினர். பொய்க்குற்றம் பல சாட்டினர்! முடிவில் தம் பதவியைத் துறந்தார். அத்துறவும் உலக நலனுக்கென்றே அமைந்தது போலும்!

டிலெசெப்சு பதவியில் இருந்தபொழுது ஒரு கடற்பயணத்தில் ஈடுபட்டிருந்தார்; அப்பயணத்தில், பொழுது போக்குக்காகப் பார்த்துக்கொண்டிருந்த நூலில் சூயசுக் கடல் இணைப்புத் திட்ட அறிக்கை ஒன்று காணப்பெற்றது. அஃது அவரை மிகக் கவர்ந்தது. அக்கவர்ச்சியே அவரைச் சூயசுத் திட்டத்தை முயன்று முடிக்குமாறு ஏவியது.