உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சங்கச் சான்றோர் I

உலகில் போரும் பூசலும் ஒழிய வேண்டும்; பிணக்கும் பிளவும் மறைய வேண்டும். இவற்றுக்கு அடிப்படையாக வேண்டுவது என்ன?

உலகம் ஒருகுடி:

'உலகம் ஒரு குடும்பம்' என்னும் உணர்வு தோன்றுதல் ஒன்றே அடிப்படையாம் அறிவியல் வளர்ச்சி இன்றைய உலகை மிக மிகச் சுருக்கிவிட்டது உண்மை. இங்கிருந்து கொண்டே இங்கிலாந்தைத் தொலையாடியில் (டெலிவிசன்) காணும் படியான அளவில் அறிவியல் வளர்ச்சி அடைந்திருப்பது உண்மை. ஆனால், அவ்வறிவியல், 'உலகம் ஒருகுடி' என்னும் உணர்வை உண்டாக்கிவிட்டதா என்பதை ஆய்ந்து காண வேண்டியதாகவே

உள்ளது.

ஊரும் உறவும் :

அமைதிக் கேடு எக்காரணங்களால் ஏற்படுகின்றது? மேற்கு, கிழக்கு, தெற்கு வடக்கு என்னும் திசைப்போர், மேல் கீழ், உயர்வு தாழ்வு என்னும் இனப்போர், வெள்ளை கறுப்பு என்னும் நிறப்போர், என் சமயம் உன் சமயம் என்னும் சமயப்போர், என் கட்சி உன் கட்சி என்னும் கட்சிப்போர், என் சாதி உன் சாதி என்னும் சாதிப் போர், உழைப்பாளர் தொழிலாளர் என்னும் பொருள் நிலைப் போர், பழக்க வழக்க மாறுபாட்டுப் போர் - ஆகிய இப்போர்கள் அமைதிக் கேட்டுக்கு அடிப்படையாக அமைகின்றன. இவற்றைத் துச்சமெனத் தள்ளிவிட்டு மாந்தர் ஒன்றுபட்டு வாழ முடியாதா? முடியும்! "எல்லாரும் எம் உடன் பிறந்தார்; எல்லா ஊர்களும் எம் ஊர்" என்னும் எண்ணம் உண்டானால் ஒன்றுபட்டு வாழ முடியும்.

உலகோர், தம்மை 'ஒருதாய் வயிற்றுப் பிள்ளை' யென உணர்ந்து கொண்டால் அன்றி உலகில் தோன்ற வாய்ப்பு இல்லை என்பதைத் தெளிவாகக் கண்டறிந்தார் சங்கச் சான்றோர் ஒருவர்.