உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

105

அத்தகைய ஒன்றுபட்ட காட்சிகளைக் காணுங்கால் அமைதி நாட்டம் உடைய புலவர் பெருமக்கள் தம் நயன்மிகு நாவால் நன்கனம் வாழ்த்தி வரவேற்றுள்ளனர்.

நீவிர் நீடு வாழ்க!

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் நெஞ்சத்தால் ஒன்றுபட்டு நேயங்கொண்டு ஓரிடத்தில் மகிழ்ந் திருந்தனர். அதனைக் கண்டார் கவிஞர் காரிக்கண்ணனார். அவருக்கு உண்டாய களிப்புக்கு எல்லை இல்லை. இந்த இருபெரு வேந்தர் களும் இவ்வாறே கூடி இருந்தால் நாட்டுக்கு எவ்வளவு நலம் பயக்கும் என்று எண்ணினார். அவ்வெண்ணத்தை அவ்வேந்தர்கள் இனிது கேட்கும் வண்ணம் உரைத்தார்.உரைக்குங்கால் தம் நாட்டு வேந்தன் ஆகிய சோழனை முன்னிலைப்படுத்தி "நீயோ, உறையூர் வேந்தன்; இவனோ, கூடற் காவலன். இருவரும் ஒருங்கு கூடிய தோற்றம், பால்நிற வண்ணனாம் பலராமனும், நீலநிற வண்ணனாம் கண்ணனும் கூடிய தோற்றம் போல் உள்ளது. எமக்கு இதனினும் இன்பந் தருவது எதுவும் இல்லை. நீங்கள் ஒன்றுபட்டு நிற்கும் இந் நன்னிலையைப் பொறுக்காமல் உங்களைப் பிரித்து வைக்கவும் சிலர் செயலாற்றலாம். சீரற்ற அவர்கள் செயலைச் சிந்தையிடைக் கொள்ளாமல் நெடுநாள் வாழ்வீர்களாக!” என்றார்.

ஒன்று பட்டதை வாழ்த்துவதுடன் ஒற்றுமையைக் கெடுக்க நினைவாரையும் சுட்டிக்காட்டி அறிவுறுத்தினார் காரிக்கண்ணனார். அஃது அவர்தம் அமைதிப் பணியின் வேட்கையை நன்றாகத் தெரிவிக்கிறது

மும்மன்னரும் முத்தீயும் :

இங்குச் சோழனும் பாண்டியனும் கூடியிருக்கக் கண்டோம். இன்னோரிடத்தே சேரமான் மாவண்கோ, பாண்டியன் கானப் பேர் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராச சூயம் வேட்ட பெருநற் கிள்ளி என்னும் மூவேந்தரும் கூடியிருக்கக் கண்டார் ஒளவையார். அவர் அக்காட்சியில் உள்ளம் ஒன்றினார். மூவேந்தர் களின் ஒன்றுபட்ட இருப்பு, அந்தணர் வேள்விகளில் வளர்க்கும் செந்தழல் மூன்றையும் அவருக்கு நினைவூட்டியது.

1.

புறநானூறு:

58.