உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

"வேந்தர்களே! வீடுபேறு ஒன்றையே விரும்பி ஆசைகளை யெல்லாம் அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும் மூன்று தீக்களைப் போல நீங்கள் அழகாக அமைந்துள்ளீர். நீங்கள் மூவரும், வானில் தோன்றும் மீன்களினும், மண்ணில் வீழும் மழைத் துளிகளினும் பலகாலம் வாழ்வீர்களாக" என்று வாழ்த்தினார். ஆள்வோர் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதில் அவருக்கு அவ்வளவு ஆவல்!

மயிலுக்குதவிய மன்னவன் :

அருள் உள்ளம் மிக்கவன் பேகன். அவன் ஒருநாள் மழை மேகம் கண்டு களிப்புடன் ஆடும் மயிலைக் கண்டான். குளிர் தாங்கமாட்டாமல் அது நடுங்குவதாக அவனுக்குத் தோன்றியது. தன் வாடைத் துயரைப் பொருட்டாக எண்ணாமல், மேலே மூடியிருந்த ஆடையை எடுத்து மயிலுக்குப் போர்த்தினான். அத்தகை அருளாளன் அவன். மயிலின் நடுக்கம் காணப் பொறாத அவன் ஏதோ காரணத்தால் தன் மனைவியை நைந்து அழவிட்டு விட்டான்.நல்லூர் என்னும் ஊரில் வேறொரு நங்கையுடன் தன் நாளைக் கழித்தான்.

பண்புடைய பாவலர் :

பேகன் மனைவியின் பெயர் கண்ணகி. அவர் துயரை அறவோர் சிலர் அறிந்தனர். அரசரே என்று கருதி வாளா விருக்க அவர்களால் முடியவில்லை. அரசியார் வாழ்வில் அமைதி உண்டாக்க முயன்றனர். முயன்றவர்கள் கபிலர், பரணர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் என்னும் புலவர்கள் ஆவர்.

"அரசே! நாங்கள் உன்னையும் உன் மலையையும் பாடினோம். அப்பொழுது குழல் ஒன்று கரைந்து அழுவது போல் ஒருத்தி அழுதாள். அவள் யாவளோ? நீ அறிவாயா? அவள் நின்னால் அருள் செய்யத் தக்கவள்" என்றார் கபிலர்.

2 "வேந்தே! நாங்கள் இசை மீட்டினோம். அப்பொழுது எங்கள்காதில் அழுகை ஒலி விழுந்தது. அழும் அவளை, 'எம் வேந்தனுக்கு உறவு உடையையோ?' என்று வினாவினோம். அவள் வழிந்த கண்ணீரைக் கையால் துடைத்துக் கொண்டே 'நாங்கள்

2. புறநானூறு: 367

1.புறநானூறு :143

2.புறநானூறு : 144,145.