உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

109

கேட்கும் உரம் எல்லோருக்கும் உண்டா? கோவூர் கிழார் என்னும் அருட்புலவர் கொலைக்களத்தில் நிற்கும் அக்கோக் கிள்ளியை நெருங்கினார்.

"வேந்தே! புறாவொன்றின் துயரத்தைப் பொறுக்க மாட்டாமல் தன் உடலையே அரிந்து தந்த அருளாளன் வழியில் வந்தவன் நீ. இவரோ, புலவர்களைப் பேணுவதே தம் தொழில் எனக்கொண்டு உள்ளவெல்லாம் உவந்தளித்த வள்ளல் பெருமகன் வழி வந்தவர். இதோ பார்! இச்சிறுவர்கள் இந்தப் புதிய இடத்தையும் இங்குள்ள ஆரவாரத்தையும் கண்டு அழுது நின்றனர். ஆனால், ஆடும் மணியுடன் மலைபோல் அசைந்து வரும் யானையைக் கண்டு அழுகையை மறந்து வியப்புடன் நோக்குகின்றனர். நான் சொல்லும் இவற்றைத் தெளிவாகக் கேட்டாய் என்றால் நீ விரும்பிய வண்ணம் செய்க!" என்றார். கோக்கிள்ளி தான் விரும்பியதைச் செய்தான் அல்லன். கோவூரார் விரும்பியதையே செய்தான். இந்நிகழ்ச்சியை நோக்குங்கால் கோவூரார் போல நயமிகப் பேசி நற்றொண்டு புரியவல்ல தொண்டர்கள் உலகிற்கு நிரம்பவேண்டும் என்னும் ஏக்கமும் எழும்பாமல் இருக்காது.

மதயானைமேல் மன்னவன்:

மதங்கொண்டு ஓடிவருகிறது யானை. அதன் மேல் இருப்பவன் பாகன் அல்லன். சோழநாட்டு மன்னன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி என்பவன். வீரர்களும், பாகர்களும் யானையை நிறுத்த முழுமுயற்சி செய்கின்றனர். வெறிகொண்ட அவ்யானை சோழநாட்டு எல்லை கடந்து சேரநாட்டுள் செல்கின்றது. அதன் தலைநகராம் கருவூரையும் நெருங்குகின்றது. வீரர்கள் விடாமல் தொடர்கின்றனர். வேந்தனும் கீழே விழாமல் தடுத்து நிறுத்தப் பார்க்கிறான். இந்நிலைமையில் கருவூர் மாடத்தில் இருந்து காணுகின்றான் சேரமன்னன் அந்துவஞ்சேரல் இரும்பொறை. பகைவன் ஒருவன் படையுடன் வருவதாக அவனுக்குத் தோன்று கின்றது. கண் சிவந்து சினங்கொள்கின்றான். அப்பொழுது உடன் ருக்கிறார் அவ்வரசனது பெருமதிப்புக்குரிய முடமோசியார் என்னும் புலவர். அவர் கிள்ளியை முன்னரே அறிவார். சூழ் நிலையையும் அவரால் அறியமுடிந்தது. குறிப்பில் குறிப்பு உணரும் திறமிக்கவர் அவர்.

1. புறநானூறு : 46.