உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

பாலில் நீர் :

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

i "வேந்தே! கடலில் செல்லும் கப்பல் போலவும், வானில் செல்லும் நிலவு போலவும் யானை வருவதைக் காண்கிறாய். அவ்யானையைச் சூழவும் சுறா மீனைப்போன்ற வாள் வீரர்கள் வருகின்றனர். இதனைக்கண்டு சினங்கொள்கிறாய். யானையோ மதங்கொண்டு பாகரை மீறி வருகின்றது என்பதை அறிவாயாக! இவன் எத்தயை துயர் இன்றியும் மீண்டுசெல்ல விடுவாயாக!' என்றார். பொங்கிவரும் பாலை நீர் விட்டுத் தணிப்பது போல் புலவர் தணித்தார். அச்செயல் இரண்டு அண்டை நாடுகள் அமைதியாக வாழத் துணையாயிற்று.

வில்லும் சொல்லும் :

இளந்தத்தர் என்பார் ஒரு புலவர். அவர் சோழன் நலங்கிள்ளியினிடம் சென்று சில நாட்கள் இருந்தார். பின்னர்ச் சோழன் நெடுங்கிள்ளி இடத்தை அடைந்தார். கிள்ளிகள் இருவருக்கும் பகைமை உண்டு என்பதைப் புலவர் அறியார். நெடுங்கிள்ளி, புலவர் பகைவனது ஒற்றராக இருக்கவேண்டும் என்று கருதினான். ஆகவே இரக்கம் காட்டாமல் கொன்றுவிடத் துணிந்தான். புலவர் இளந்தத்தருக்கு நல்லூழ் இருந்திருக்கிறது. ஆகவே அங்குக் கோவூர்கிழார் இருந்தார். அவர் இளந்தத்தரை நன்கு அறிவார். உடனே மன்னனிடம் சென்று, "பழமரம் நாடும் பறவைகளைப்போல பரிசில் கிடைக்கும் இடங்களைப் பாவலர்கள் விரும்பி அடைவர். அவர்கள் வாழ்வில் எத்தகைய களங்கமும் கொடுமையும் இல்லை. நாம் அவர்கள் மேல் குறையோ, கறையோ கற்பித்தல் அறம் அன்று" என்றார். வில்லாண்மையினும் சொல்லாண்மை வலியது என்பர். அதனை மெய்யாக்கியதுடன் புலவர் ஒருவர் உயிரையும் காத்தார் கோவூரார்! அவர் தொண்டு பெரிது! அவர் வாழ்க!

இதுகாறும் தனிப்பட்டவர் அமைதி வாழ்வுக்குப் பாடுபட்ட சங்கச்சான்றோர் சிலரைக் கண்டோம். இனி, நாட்டின் அமைதிக்குப் பாடுபட்ட சங்கச்சான்றோர் சிலரைக் காண்போம்.