உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

117

அறத்தோடு சேர்ந்ததாகவும் இல்லை; மறத்தோடு பொருந்திய தாகவும் இல்லை. ஆகவே ஓடி ஓடி அமைதிப்பணி புரிந்த அருட் புலவர் கோவூரார் இந்நிலைமையை அறிந்து உறையூர் சென்று நலங்கிள்ளியைக் கண்டார்.

வள்ளல் புலவரும், கிள்ளிகளும் :

"மன்னவ! மதிலுக்குள் இருப்பவன் பனம்பூ மாலை சூடிய சேரனும் அல்லன். வேப்பம்பூ மாலை சூடிய பாண்டியனும் அல்லன். அவன் சூடியிருப்பதும் ஆத்திப்பூ. நீ சூடி இருப்பதும் ஆத்திப்பூவே. இப்பூவே நீங்கள் இருவரும் ஒரு குடியினர் என்பதைக் காட்டும். அவ்வாறு இருக்கவும் நீங்கள் இருவரும் போரிடுவது உங்கள் குடிக்கே இழுக்காகும். எவர் ஒருவர் தோற்றாலும் சரி உங்கள் குடிக்கு இழிவே.

"எந்தப் போராட்டத்திலாவது போரிட்ட இருவரும் வெற்றி காண்பது உண்டா? ஆகவே, இது உங்கள் குடிக்குப் பெருமை தருவது ஆகாது. அன்றியும் உங்கள் பகைவர்க்கு மாறா மகிழ்ச்சியும் தரும். ஆதலால் போர் ஒழிக" என்றார்.

நலங்கிள்ளி முற்றுகை தவிர்ந்தான். நெடுங்கிள்ளியும், நாட்டினரும் உய்ந்தனர். இத்தகைய தொண்டு செய்த சங்கச் சான்றோர் பலர். அதற்குரிய சான்றுகளும் பல. சுட்டிக் காட்டும் அளவில் சிலவற்றை இவண் அறிந்தோம். இனி இந்நாட்டில் இருந்து அமைதிப் பணி செய்தற்கென வடநாடு சென்ற ஒரு வேந்தனைக் காண்போம்.

ஒரு செந்தண்மை :

பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் நடந்த வியத்தகு நிகழ்ச்சி இது. பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர் நடந்தது. அதற்குப் பாரதப் போர் என்பது பெயர். அது பதினெட்டு நாட்கள் நடைபெற்றது. அப் போர்க்குத் துணையாகப் பலப்பல அரசர்கள் சென்று இரு பக்கத்திலும் கலந்து போரிட்டனர். ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த உதியஞ் சேரலாதன் என்னும் மன்னவன் இரண்டு பக்கப் படைகளுக்கும் துணையாகச் சென்றான். 'அஃதெப் படி முடியும்?' என்னும் ஐயம் எழலாம். ஆனால் அவன் இரண்டு பக்க படைகளுக்கும் செயற்கரிய உதவி செய்த செந்தண்மைச் செயலைப் புறநானூறு இன்றும் மலைமேல் விளக்கெனக் காட்டுகின்றது.