உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

133

ஆட்டைப் பார்க்கிலும் எத்துணையோ சிறந்தவர் மாந்தர். ஆகவே நான் ஓய்வு நாளில் நன்மை செய்வது முறையே" என்றார். இளைப்பாற இங்கே வருக :

தாழ்ந்தோர்களை உயர்த்த வந்த அருட்பெருமகனாரிடம் உயர்வு தாழ்வு பற்றிய உணர்வு உண்டா? மத்தேயுவின் வீட்டில் நடந்த ஒரு விருந்தில் தாழ்ந்தவர்கள் எனக்கருதப்பட்ட பலர் சூழ்ந்திருக்க விருந்துண்டார்.அதனைக் கண்ட ஒருவன் இயேசுவின் சீடன் ஒருவனிடம் "இயேசு தாழ்ந்தவர்களோடும், பாவிகளோடும் உடன் இருந்து உண்பது என்ன?' என்று வினாவினான். அதனை அறிந்த இயேசு "பிணியாளர்களுக்கு மருத்துவன் உதவி வேண்டுமே ஒழிய நலத்துடன் இருப்பவனுக்கு வேண்டுவது இல்லை” என்றார். என்ன அருமையான விடை! "துன்பச்சுமை சுமப்பவர்களே! நீங்கள் அனைவரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு ஓய்வு தருவேன்” என்னும் அருளாளரிடம் இவ்விடையை அன்றி எதனை எதிர்நோக்க முடியும்?

கண்ணீரால் கால்கழுவல்:

ன்னொரு வீட்டிலே இயேசுவுக்கு விருந்து நடை பெற்றது. 'பாவி' என்று கருதப்பெற்ற பெண்ணொருத்தி அங்கு வந்து இயேசுவின் கால்களைத் தன் கண்ணீரால் கழுவினாள். தன் கூந்தலால் அவர் கால்களைத் துடைத்தாள். இவற்றை ஆங்கிருந்த செல்வச் செருக்குடைய வீட்டுக்காரன் கண்டு நகை செய்தான். அப்பொழுது இயேசு, "செல்வனே! உனக்கு ஒன்று சொல்கின்றேன். ஒரு செல்வனிடம் இரண்டு பேர்கள் கடன் பட்டிருக்கின்றனர். ஒருவன் 500 வெள்ளியும், மற்றொருவன் 50 வெள்ளியும் கொடுக்க வேண்டியிருந்தது. கொடுக்க இருவருக்கும் வகை இல்லை. இருவர் கடனைத் தள்ளப்பெற்ற இருவருள் எவன் செல்வனுக்கு மிக அன்புடையவனாக இருப்பான்?” என்றார்.அப்பொழுது செல்வன் "500 வெள்ளியை மன்னிக்கப் பெற்றவனே மிக அன்புடையவனாக ருப்பான்" என்றான்."சரி! உன் வீட்டுக்கு நான் விருந்தாளியாக வந்தேன்.ஆனால் நீ என் கால்களைத் தண்ணீரால் கழுவவில்லை, துணியால் துடைக்க வில்லை. இப்பெண்ணோ தன் கண்ணீரால் நனைத்துக் குளிப்பாட்டிக் கூந்தலால் துடைத்தாள். இத்தகைய அன்புடைய இவள் மேல் உன்னைப் பார்க்கிலும் யான் மிக அன்பு செலுத்துவது முறைமை அல்லவா!" என்றார் இயேசு. "இதயத்தின் நிறைவினால் வாய்பேசும்” என்பது அந்த அறவோர் வாக்கு. அது மெய்யாயிற்று.