உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

135

ஒருவனை ஏழு தடவைகள் மட்டுமல்ல; ஏழெழுபது தடவைகள் மன்னிக்கவேண்டும்."

இத்தகைய மணிமொழிகளை அவ்வள்ளல் வாரி வாரி வழங்கினார்.ஆனால் அவருக்குப் பேரும் புகழும் வளரத் தொடங்கின.

நல்லவர் இடையே பொல்லாதவன் :

புகழ் வளருவதையும், தூய்மை பெருகுவதையும் மக்கள் மனந்திரும்புவதையும் கண்டு உள்ளம் வெதும்பி நல்லவர் யேசுவை ஒழித்துக் கட்ட நாட்பார்த்துக் கொண்டிருந்தனர் பொல்லாத மாக்கள் சிலர். அவர்களிடம் சென்று “நான் அவரை உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன்; நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள்?" என்று கேட்டான் இயேசு பெருமானின் பன்னிரு சீடர்களுள் ஒருவனாக இருந்து, அவர் செய்துவரும் நற்பணிகள் அனைத்தையும் உடன் இருந்து அறிந்த அந்தப் பொல்லாத யூதாசு!

வருவ தறிதல் :

"என் வேளை அண்மையில் இருக்கிறது." "என் உயிர் இறப்புக்கு ஏதுவான பெருந்துயர் கொண்டிருக்கிறது;”“மேய்ப்பன் வெட்டப் படுவான்; மந்தை ஆடுகள் சிதறும்;” “மனித குமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக் கொடுக்கப்படும் வேளை வந்துவிட்டது;" "இதோ என்னைக் காட்டிக் கொடுப்பவன் வந்து விட்டான்” என்று பின் வருவதையெல்லாம் நன்றாக உணர்ந்திருந்த அப்பெருமான் தமக்கு நேர இருக்கும் சிலுவைப்பாடு கருதிச் சிறிதும் துன்புற்றார் அல்லர்.

பொறுமை மலை :

இறைவனால் அனுப்பப் பெற்று, இறைவன் தொண்டொன்று கருதியே வாழ்ந்த இயேசு பெருமான்மேல் 'இறைவனை இகழ்ந்தார்' என்னும் குற்றம் சுமத்தப்படுகிறது. சிலுவையும் சுமத்தப்படுகிறது. அன்னை மரியும், அன்பர்களும் நகராரும் அழுது அரற்றுகின்றனர். பொறுமை மலையாக நடக்கின்றார் இயேசு பெருமான்.

பழி சூட்டியவர்களும், போர் வீரர்களும் கேலி செய்தனர்; முள்ளால் முடி செய்து தலையில் வைத்து அழுத்தினர். காறி உமிழ்ந்தனர்; காடியைக் குடிக்குமாறு ஏவினர்; குற்றவாளிகள் இருவர் இடையே வைத்து அவரைச் சிலுவையில் அறைந்தனர்.