உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

139

இடத்தில் பதித்தார். பிரிவு பட்டவர்கள் ஒன்றுபட்டுப் பணி செய்யத் தொடங்கினார்கள் நபிகளின் நற்செயல் நகரத்தை ஒன்று படுத்தியது. அப்பொழுது நபிகள் நாயகத்தின் அகவை இருபத்து மூன்றேயாம்.

நல்லனவும் அல்லனவும்:

விருந்தோம்பல் தன்மை, உரிமை வேட்கை, மானம்,நாநயம் இவற்றில் சிறந்து விளங்கினார்கள் அந்நகர மக்கள். ஆனால் அவர்கள் சமுதாய வாழ்வில் குறைபாடுகள் பலப்பல ஊறிக் கிடந்தன.

பெண்கள் ஆண்களிலும் மிக மிக இழிவாக நடத்தப் பெற்றனர்; மக்கள் மதுக் குடியிலே பெரிதும் மயங்கி நின்றனர். சூதாட்டத்தைக் கவர்ச்சி மிக்க இன்பப் பொழுது போக்காகக் கொண்டிருந்தனர். மாந்தர்களையும் விலங்குகளையும் ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று தொலைத்தனர்.

கொடுமை! பெருங்கொடுமை!:

ஒட்டகம் முதலிய விலங்குகளைக் கொல்லாமலே தசைப் பகுதியை மட்டும் அறுத்தெடுத்துக் கறி சமைத்து உண்டனர். பின்னர் வேண்டும் போதுகளில் அதில் இருந்து தசைப் பகுதியை அறுத்துக் கொண்டனர். இத்தகைய கொடுமைக்கு ஆட்பட்ட விலங்குகள் கண்ணராவிக் காட்சி வழங்கிக் கொண்டிருந்தன. எனினும் அவற்றின் துடிப்போ அவலமோ அவர்களுக்குச் சிறிதும் தோன்றுவதே இல்லை.

அடிமைகள் வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. அடிமைகளை விலங்கினும் இழிவாக நடத்தினர். அடிமையைக் கசையினால் அடிக்கும் ஒருவன், "நான் அடிக்க முடியாத அளவில் சோர்வு அடைந்தமையால் அடிப்பதை நிறுத்தினேனே அல்லாமல் அடிமைமேல் இரக்கப்பட்டு நிறுத்தினேன் அல்லேன்" என்றான். என்ன பேரருள் மொழி இது!

தெய்வம் பலப்பல:

முன்னர் வாழ்ந்த நபிகள் காலத்தில் ஒரே தெய்வத்தை வணங்கி வந்த மக்கள் பல தெய்வங்களையும், உருவ வழி பாட்டையும் கொள்ளத் தொடங்கினர். மக்காவில் இருந்து கஃபாவில் மட்டும் முந்நூற்று அறுபது வழிபாட்டு உருவங்கள் வைத்து வழிபட்டனர். வீடுகளிலும் கடவுள் உருவங்கள் வைத்து வணங்கினர்.