உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

‘என் கடன் பணி செய்து கிடப்பதே’

என்னும் அவர் திருவாக்கால் நன்கு அறியலாம்.

அடியார்கள் அனைவரும் திருக்கோயில் சென்று வழிபடு வதையே பத்தி நெறியாகக் கொண்டிருந்த நாளிலே, அதனைத் தொண்டு நெறியாகக் கொண்டவர் அப்பரடிகள். கோவிலைச் சுற்றியுள்ள குப்பை கூளங்களைக் கூட்டுதல், கோபுரங்களில் முளைத்த செடி கொடிகளை வெட்டுதல், கோவிலுக்குள் சென்று பெருக்கி மெழுகுதல், ஆய பணிகளைச் செய்தார். தம் தொண்டுக்குத் துணையாகும் உழவாரப் படையை உடன் கொண்டு சென்றார்.

கங்கை காவிரி ஆடுவதினும், வேத வேள்வி செய்வதினும், நோன்பு பட்டினி கொள்வதினும் அகங் குழைந்து அன்பராகி இறைவன் தொண்டு செய்தலே இன்பம் எனக் கூறினார் அத் தொண்டர் பெருமான்

“தொண்டலால் துணையும் இல்லை” என்றும்

"தொண்டர் அகமலால் கோவில் இல்லை"என்றும் “விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி யாகும்" என்றும்

தொண்டின் பெருமையை விளக்கினார்.

மாந்தர் இன்புற்று வாழவேண்டும் என்னும் மட்டற்ற விருப்புடைய அப்பர் பெருமான் "மாந்தர்களே! இங்கே வாருங்கள்; உங்களுக்கு இன்பம் பயக்கும் ஒன்றை உரைக்கின்றேன்; உங்களை அழைத்து அழைத்துக் கனி வழங்கினாலும் அக்கனியை உண்ண மாட்டீர்களோ? இறைவன் என்னும் இனிய கனி இக் கோவிற்கண் உள்ளது; சென்று அருந்துக" என்று வேண்டினார். இத்தகைய தொண்டர் பெருமான் அருள் தொண்டிலே அகங்குழைந்து ஒன்றினார் அப்பூதியடிகள். அவர் நாவுக்கரசர் பெயரால் தண்ணீர்ப் பந்தல் அமைத்து அருந்தொண்டாற்றினார். தொண்டர் பெருமையைத் தொண்டரே அறிவார் அல்லவா!

தாயுமானார் தண்ணெறி :

தாயுமானவ அடிகள் பேரருளாளர்; உயிர்களின் அமைதிக்கு அரும்பாடுபட்டவர். உலகப் பொருள்கள் அனைத்தும் இறைவனே எனக்கருதிய பெருந்தகை அவர். பூவினைப் பறிப்பதுகூட அருளற்ற