உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

ஆண்டவன் உமக்கு அருளியிருக்கிறான்" என்று வேண்டினார். எத்தகைய அருட்செயல் இது!

எது பெரிது :

சேற்றில் மூழ்கிக்கொண்டு இருக்கின்றது பன்றி ஒன்று. அவ்வழியே குதிரை வண்டியில் செல்கின்றார் லிங்கன். அடுத்த ஓர் ஊரில் உள்ள வழக்கு மன்றத்திற்குச் செல்லும் வழியில் கண்ட நிகழ்ச்சி இது. தம் துணியில் சேறு படிந்துவிடுமே என்று கருதி முதற்கண் சிறிது செல்கிறார். ஆனால் அவர் உள்மனம் விட வில்லை."ஒன்றன் உயிர் போவது பெரிதா? உடுத்திய துணியில் அழுக்குப் படிவது பெரிதா?" என்னும் வினாக்கள் எழும்பின. வண்டியை விட்டுக் கீழே இறங்கி ஆழ்ந்து போய்க்கொண்டிருக்கும் பன்றியைத் தூக்கி வெளியேற்றினார். அது துள்ளித் துடித்து அடித்த அடியில் உடை முழுவதும் சேறாகியது. உடையை நீரில் நனைத்து உலர்த்திக்கொண்டே வழக்கு மன்றத்திற்குச் சென்றார். எல்லா உயிர்களையும் தம்முயிராகக் காக்கும் அருளாளர்க் கன்றிப் பிறர்க்கு இக்குணம் வாராது.

ஏழை எளியவர்க்காகவும், நீக்ரோவர்க்காகவும் எத்தகைய பயனையும் எதிர்பாராமல் தாமே முன் வந்து வழக்காடினார். அடுத்த வேளை உணவுக்கு வழியற்ற போதும் முறையற்ற காசு ஒன்றையும் வாங்கினார் அல்லர் மாறாப்பகை கொண்டு நின்றவர் களையும் நண்பராக்கிப் பகை ஒழிக்கப் பாடுபட்டாரே அல்லாமல் சிறிய பகையையும் உண்டாக்கினார் அல்லர். அத்தகையவர்க்கும் சொல்லொணாத் துயரங்கள் சூழ்ந்தன. அவர் செய்த அடிமை ஒழிப்பே அவருக்குத் துப்பாக்கிக் குண்டுகளை நல்கியது. உலகில் என்று தான் விலங்கியல் ஒழியுமோ?

அண்ணல் காந்தி:

காந்தியடிகளை அரசியல் அறிஞர் என்பதா? சமயச் சான்றோர் என்பதா? அருட்பெரியார் என்பதா? இவ்வனைத்தும் கூடிய ஓர் உருவமே காந்தியடிகள். வாழ்ந்த காலமெல்லாம் அவர் பேச்சும் மூச்சும் அமைதி அமைதி என்றே இருந்தன. கொடியவன் குண்டுபட்டுக் கீழே வீழ்ந்தபோதும் 'அமைதி, அமைதி' என்றே ஒலித்தன!