உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

,

அடிகள்! உதைகள்! குருதி கொட்டக் கல்லாலும் கழியாலும் தாக்கப்பெற்ற கொடுமையை என்னென்பது! செருப்புக் காலால் ஏற்றப்பட்டபோது கூடச் சினங் கொள்ளவில்லையே அந்த அருட்கனி! கண்ணாரக் கண்டவர்கள் மேலும், காவல் துறையினர் 'இவரே குற்றவாளி' எனக் கொண்டு வந்து நிறுத்தியவர்கள் மேலும், நடுவர்களை 'இவர்கள் தண்டனைக்குரியவர்கள்' என்று கூறியவர்கள் மேலும், அருள் செலுத்தி வழக்குத் தொடுக்காத பெருந்தன்மை, தெய்வத் தன்மையே அன்றி மனிதத் தன்மை என்பது பொருந்தாது. அத் தன்மையே அவரை மகாத்மா ஆக்கி, உலகத் தலைவராகச் செய்தது.

மாந்தரின் நல்வாழ்வு மட்டுமோ மகாத்மாவின் கருத்தாக இருந்தது? கன்றுக்குப் பால் விடாமலும் பொய்க் கன்றுகளைக் காட்டியும், கறந்த கொடுமையைக் கண்டு அல்லவா மாட்டுப் பால் பருகுதலை அறவே விட்டார் அடிகள்!

அருள் வெள்ளம் :

கழுத்துப் புண் உடைய மாடு பூட்டப்பெற்ற வண்டியில் ஏறி வந்த பாவத்திற்காகக் கழுவாயாக, அந்த வண்டியை மாடு எவ்வளவு தொலைவு இழுத்து வந்ததோ அவ்வளவு தொலைவும் இழுத்துக் கொண்டு வந்த அடிகளின் செயல் எத்தகைய அருளின் பாற்பட்டது! அறியாமல் நிகழ்ந்த குற்றத்திற்காக, இது குற்றம் என்று குறிப்பிட்டு வழக்குத்தொடுக்க வாயில்லாத அந்த உயிருக்காகத் தண்டனையைத் தாமே வலிந்தேற்கும் ஒருவர் மனுச்சோழனுக்குப் பின் காந்தியடி களாகத்தான் இருந்திருப்பார் போலும்!

இரவுப் பொழுதில் இலை தழைகளைப் பறித்து வருகிறார் இளைஞர் ஒருவர். அடிகள் அதனை அறிகிறார். அப்பொழுது "மரங்களும் நம்மைப் போல உயிர் உடையவையே யாம். அவை நம்மைப் போலவே வளர்கின்றன; முகர்கின்றன; உண்கின்றன; பருகுகின்றன; உறங்குகின்றன; அவை இரவில் ஓய்வு பெற்று உறங்கும்போது அவற்றின் தழைகளைப் பறித்தல் இழிதகைமை யாகும். என் மேல் தூவவும் என் கழுத்தில் மாலையாகச் சூட்டவும் மென்மையான மலர்களைப் பறிப்பது துன்ப மூட்டுகிறது. அஃறிணை உயிர்களிடத்தும் நாம் பரிவு காட்ட வேண்டும்" என்று இளைஞனிடம் கூறினார். இக் கூற்றிலே பொதிந்துள்ள அறம் நினைக்க நினைக்க நெஞ்சை நெகிழச் செய்கிறது.