உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

175

வந்திருந்தமையால் அவரை உண்பித்து ஓய்வு கொண்டு பிற்பகல் இரண்டு மணியளவில் இருவரும் கோவைச் செலவு மேற் கொண்டோம். கருவூர்-கோவை சென்று அன்று இரவு,

காந்திபுரத்தில் இருந்த வழக்கறிஞர் என் பேரனார் குகனொடு தங்கினோம். விடியலில் எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கோவைத் தொடர்வண்டிச் சந்திப்பை அடைந்தோம். யாங்கள் புறப்பட இருந்த வண்டி காலை 8 மணிக்குப் புறப்படுவது. ஆதலால் உணவை வண்டியிலேயே முடிப்பது நலமென ஏறினோம்.

அவ்வண்டி ஈரோடு, சேலம், தருமபுரி, வெங்காலூர் எனச் சென்று ஆங்கிருந்து மும்பைத்தடத்தில் செல்வது. இவையெல்லாம் புதிய இடங்கள் அல்லவே!

வண்டி ஈரோட்டுச் சந்திப்பை அடைந்த போது, எங்கள் வரவை எதிர்நோக்கி, வரவணரின் மாமனார் திரு. வேலுசாமி அவர்கள் அம்மையாருடன் பரிய பைகளொடும் இருந்தார். இயல்பாகவே வேலாயுதர் சுமை பெரிது! அதே அளவு மேலும் சுமை! ஆனால், உடலால் இல்லையானாலும் எப்பொழுதும் அன்பு நண்புச் சுமை தாங்கி: உற்றார் உறவுச் சுமைதாங்கி: அவர் நினைத்தாலும் அவர் சுமைதாங்கியாக இல்லாமல் இருக்க முடியாத அளவு பழகிப்போன சுமைதாங்கி வேலாயுதனார்!

"இந்த அரிசி, இந்தப் பருப்பு, இந்த பண்டம் வேண்டுமா ஏன் இவ்வளவு சுமை" என்றால், இவை நாசிக்கில் கிடையா: அன்றியும் நம்மண்ணில் நம் உழைப்பில் விளைந்தது: அதைப் பயன்படுத்துவது தனி இன்பம் இல்லையா? தொடர் வண்டி வரை தானே சுமை; பிறகு நாமா சுமக்கப் போகிறோம்" என்பார் அவர் இயற்கைக் காதலர்! மண்ணை மறவா மாண்பர்! மற்றவர் அடையும் இன்பத்தைத் தம் இன்பமாகக் கண்டும் கொண்டும் வாழ்பவர்! அதுவே வாழ்வாகிப் போனவர்: அப்படித்தானே இருக்க முடியும்?

வேலுவும் வேலாவும் தொடரி ஊதி -ஓட்டமெடுக்கும் அளவும் அளவளாவி உரையாடினர்: அனைவரும் வணங்கி விடை பெற்றோம்! தொடர்ந்தது செலவு தொடரியில்: சேலம் தருமபுரி செல்லும் போதே வெயில் வாட்டியது! ஓடும் வண்டியிலேயே அவ்வெயில் வாட்டல் என்றால், நேர் வெயிலில் கல்லில் கரட்டில் காட்டில் உழைக்கும் மக்கள்! மிதியடியா, குடையா? மிதியடியும் குடையும் காட்டு வேலைக்கு ஆகுமா? உழவினார் கைம்மடங்கின் உய்வார் யார்? உலகுய்ய வாழ்வாரே அவர்

-

-