உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

ஊர்தி! உள்ளே தனித்தனிச் சடங்கு நடத்துவோர்! பழனிவரிசை, திருப்பதி வரிசை! நிற்க விடாமல் விரைந்தோட்டும் வீரத் தொண்டர்! வெளியேயோ சுடு நெருப்பாக வெயில்! வெளிவாயில் பக்கம் ஒரு கடை! இயற்கையைப் பேணிக்காக்கும் நோக்கில் அமைந்த பொருள் விற்பனைக்கூடம்! கலைப்பொருள்! அமைந்து கண்டு வேண்டுவ கொண்டார் வேலாயுதர்! சரோசினியாரும் பங்கு கொண்டார்! பொழுது இரண்டைத் தொட்டது! வழியில் தேடிப்பிடித்து ஒருமரத் தடியில் வண்டியை நிறுத்தி உணவு கொண்டோம்!

வண்டி ஓட்டுநர் ஓர் அம்மையார் நிற்பதைச் சுட்டிக் காட்டினார்! தோட்ட வேலை செய்பவர் என எண்ணினோம். ஆனால் அசைவு இல்லை! நகர்வு இல்லை! காற்றிலும் ஆடை அலையவில்லை! ஓட்டுநர் கூறினார்! அத்தோட்டக்காரர் செய்தமைத்துள்ள சிலை என்று! அவர் சொல்லாமல் இயல்பாகப் பார்த்துச் சென்றால் தோட்டத் தொழிலரோ, உரிமையரோ ஆகிய அம்மையார் எனவே முடிவு செய்ய நேரிடும்! அத்தகைய இயற்கை!

கங்கை கோதாவரி தோன்று நிலையைக் கண்டு திரும்பிய போது, பழைய நினைவு ஒன்று ததும்பியது!

முன்னை வடநாட்டுச் செலவின் போது கோதாவரி இருகரை தொட்டு வெள்ளமாய்ப் பெருகிச் செல்லும் தோற்றம் கண்டு கம்பர் பாடல் மலைமேல் விளக்காய் ஒளி செய்தது. சங்கச் சான்றோர் பாடல்களைக் கம்பர் எத்தகைய தோய்வில் பயின் றுள்ளார்; எத்தகைய அரிய மதிப்பீடு செய்துள்ளார் என்பது புலப்பட்டது.“சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி” என்பது அது. சான்றோர் எனின் அந்நாளில் சங்கச் சான்றோரேயாவர்.

“புவியினுக் கணியாய் ஆன்ற பொருள்தந்து புலத்திற்றாகி அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறியளாவிச்

சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் பொருந்திச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதா வரியினை வீரர் கண்டார்”

என்பது அப்பாடல் (ஆரணிய சூர்ப்ப.1).

இராம இலக்குவ சீதையர் கோதாவரியைக் காணவிட்டு விட்டுக் கம்பர் சங்கச் சான்றோர் தமிழ்க்கொடை வெள்ளப் பெருக்கில் உள்ளம் செலுத்திய பெருமையது இது.